எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய 50 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது!

எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதிய 50 ஏர்பஸ் விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 16 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் அவை விநியோகிக்கப்படும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக வாங்கப்பட உள்ள இந்த 50 ஏர்பஸ் விமானங்கள், ஏர்பஸ் 350-900 ரகத்தைச் சேர்ந்தவை ஆகும்.

எமிரேட்ஸ் நிறுவனம், 84 நாடுகளில் 158க்கும் அதிகமான இடங்களுக்கு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், 267 பெரிய விமானங்களை அந்நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எமிரேட்ஸ் A380 ரக விமானங்களில் 850 பயணிகள் வரை பயணம் செய்யமுடியும். ஆனால், எண்ணிக்கையை நிரப்ப நிறுவனம் சிரமப்பட்டது.

எனவே குறைந்த எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய A350 ரக விமானங்களை வாங்க எமிரேட்ஸ் முடிவெடுத்துள்ளது.