வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் வட்டி வழங்கும் GXS மின்னிலக்க வங்கி – சிங்கப்பூரில் முதல் முறையாக அறிமுகம்

GXS-Bank-Introduces-Savings-Account-Ahead-of-Launch
சிங்கப்பூரின் Singtel நிறுவனமும் Grab நிறுவனமும் இணைந்து ‘GXS’ மின்னிலக்க வங்கியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது வங்கியில் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.சிங்கப்பூரில் மின்னிலக்க வங்கி ஒன்று சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கென்று பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல், ‘GXS Savings Account’ செயலியை ஆப்பிள் போனின் ‘App Store’ ,’Google Playstore’ ஆகிய இரண்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல்முறை வேலைக்குச் செல்வோர்கள்,தொழில் முனைவோர்கள் போன்றோரின் தேவைகளுக்கு ஆதரவு வழங்குவது இதன் நோக்கம் என்று ‘GXS’ மின்னிலக்க வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சார்லஸ் வோங் கூறினார்.
பயனாளர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை வைத்திருப்பது அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கான வட்டி நாள் அடிப்படையில் கணக்கிடப்படும்.

மின்னிலக்க வங்கி வாடிக்கையாளர்கள்,முதல்கட்டமாக அவர்களது கணக்கில் ஆண்டுக்கு அதிகபட்சமாக $5000 வரை செலுத்தலாம்.அந்த தொகைக்கு ஆண்டுக்கு 0.08% என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.
ஒரே கணக்கின்கீழ் கல்விச்செலவு,விடுமுறை எனத் தனித்தனியாக 8 பிரிவுகளில் சேமிக்கலாம்.கடந்த 2020-ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூர் நாணய ஆணையம் இரண்டு வங்கிகளுக்கு உரிமம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.