சூரிய சக்தியில் இயங்கும் ஈ.வி. சார்ஜிங் மையத்தைத் திறந்த செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ்!

Photo: Sembcorp

சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து, பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. மேலும், மின்சார வாகனங்களை உற்பத்திச் செய்யும் நிறுவனங்கள், அதன் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள கிளெமென்டி- புக்கிட் மேரா (Clementi-Bukit Merah) மற்றும் சிட்டி- புங்க்கோல் (City-Punggol) உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளையும், மறுச் சுழற்சி கழிவுகளையும் சேகரிப்பதற்காக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமானசெம்ப்வேஸ்ட் (SembWaste) அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, செம்ப்வேஸ்ட் நிறுவனத்தால் இயக்கப்படும் குப்பைச் சேகரிப்பு வாகனங்களுக்கான மின்சார சார்ஜிங் மையத்தை துவாசில் உள்ள செம்ப்கார்ப் பணிமனையில் அமைத்தது செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் (Sembcorp Industries). இது தற்போது திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

குளிக்கும்போது வீடியோ எடுத்த பல்கலைக்கழக மாணவருக்கு சிறைத் தண்டனை!

இந்த மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தில் சோலார் பேனல் அமைக்கப்பட்டு, சூரிய சக்தி (Solar-Powered Electric Vehicle- ‘EV’ Charging Hub) மூலம் சார்ஜிங் செய்யப்படுகிறது. நான்கு மணி நேர விரைவு சார்ஜிங் சுழற்சி முறையில், ஒரே நேரத்தில் 18 தொழிலக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய முடியும்.

இந்த மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், “பசுமை வாகனங்களுக்கான ஊக்குவிப்பு முயற்சியில் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸின் நடவடிக்கை குறிப்பிடத்தக்கது. வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களை மின்மயமாக்குவது, மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பை அதிகரிப்பதை ஊக்குவிக்க உதவும்” என்று கூறினார்.

இது சிங்கப்பூரின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் ஈ.வி.சார்ஜிங் மையம் என்பது குறிப்பிடத்தக்து.