இரு தமிழ்ப் படங்களில் நடிக்க இரு இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தம் – ரசிகர்கள் சர்பிரைஸ்

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் விளையாடுபவராகவும் தமிழில் டுவிட் செய்பவராகவும் இருந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோலிவுட்டில் நடிகராக களம் இறங்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானத்தின் புதியதாக வரவிருக்கும் படமான டிக்கிலோனா பற்றி ஒரு ஆர்வத்தை தூண்டும்படியான செய்தி வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படம் மூலம் கோலிவுட்டில் ஒரு நடிகராக களம் இறங்குகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இதனை அதிகாரப்பூர்வமாக் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து செயல்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஹர்பஜன் சிங்கை வரவேற்கிறோம் என்று அந்நிறுவனம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

இந்த படம் ஒரு அறிவியல் புனைகதை படம். இதில் சந்தானம் கதாநாயகன், வில்லன், காமெடியன் என மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது டிக்கிலோனா படம் ப்ரீ புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. இந்த நவம்பர் மாதம் படப்பிடிப்புக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் யாரையும் இன்னும் அறிவிக்கவில்லை.

இது குறித்து தமிழில் டுவிட் செய்துள்ள ஹர்பஜன் சிங் சந்தானம் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில், “தமிழ் சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா, சோல்ஜர்ஸ் ஃபேக்டரி, சந்தானம் மற்றும் குழுவினருக்கு நன்றி. தலைவர், தல தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விக்ரம் பல கெட்டப்களில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை 2020 ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இர்பான் பதான், ‘ஜலாக் திக்லா ஜா’ என்ற ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இவரும் இவரது சகோதரர் யூசுப் பதானும் இணைந்து ‘கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்ஸ்’ என்ற கிரிக்கெட் அகாடமியை ஆரம்பித்து கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

You cannot copy content of this page