சினிமா செய்திகள்

சிங்கப்பூரில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி!

Nerkonda Paarvai Premier Show at singapore

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திரையிடப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன், தாப்ஸி நடித்து பெரிய வெற்றி பெற்ற ‘பிங்க்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக் ‘நேர்கொண்ட பார்வை’. அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித்குமார், தாப்ஸீ கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, ஹெச்.வினோத் இதை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 8 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல அரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படங்களின் பிரத்யேகக் காட்சி திரையிடல் என்பது வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னரோ அல்லது வெளியீடு அன்றோ இருக்கும். ஆனால் சமீப காலங்களில் முதல் முறையாக, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி என்று சொல்லப்படும் பிரத்யேகத் திரையிடல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நடைபெறுகிறது.

சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 6) காலை 9 மணிக்குத் துவங்கும் இந்த திரையிடலில் பங்கேற்க படத்தில் நடித்திருக்கும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஆகியோர் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

இந்தத் திரையிடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர், “இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் இன்று ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடல் ஆரம்பிக்கிறது.

எனது மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார், ஹெச் வினோத், ஒட்டுமொத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இதை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, அஜித்குமாரை வைத்து தமிழில் ஒரு படம் தயாரிக்க நினைத்திருந்தார். அவர் மறைவுக்குப் பின், அஜித்குமார் தானாகவே போனிகபூரை தொடர்பு கொண்டு இந்தப் படத்தை ஆரம்பித்தது நினைவுகூரத்தக்கது.

Related posts