மளிகை கடை ‘டூ’ ஜனாதிபதி மாளிகை! – சிங்கப்பூரின் முதல் குடியரசுத்தலைவர் யூசுஃப் பின் இஷாக் கடந்து வந்த பாதை!

ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகனின் மனதிலும் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நினைவுகள் நீக்கமற நிறைந்திருக்கும். இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் போராடிய நொடிகள் நம் கண்முன்னே வந்து போகும். அவருக்கு நன்றி சொல்லாமல் ஒரு சிங்கப்பூரரும் தனது நாளை தொடங்க மாட்டோம். அதுபோலவே, முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரின் புகைப்படத்தை ஒவ்வொரு சிங்கப்பூர்வாசியும் வீடுகளிலும் சட்டைப் பைகளிலும் பாதுகாத்து வைத்துக் கொள்வோம். அவரின் புகைப்படத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு நபருக்கும் புன்னகை தவழும். அவரின் புகைப்படம் பார்க்காமல் ஒருவர் கூட உறங்கச் செல்லமாட்டோம். அந்தக் குடியரசுத்தலைவரின் பெயர் யூசுஃப் பின் இஷாக். சிங்கப்பூரின் முதல் குடியரசுத் தலைவரான அவரின் உருவம்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணத் தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது.

யூசுஃப் இஷாக் ஆகஸ்ட் 12, 1910-ம் ஆண்டு, மலேசியாவின் பெராக் நகரில் பிறந்தார். இவரது தந்தை அரசுப் பணியாளர். இவரின் தந்தை, சிங்கப்பூருக்கு மீன்வள உதவி ஆய்வாளராக 1923-ம் ஆண்டு மாற்றப்பட்டார். அதனால் அவர் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாகை மாறினார். யூசுஃப் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். அத்துடன் நிற்காமல், அவர் ஒரு நல்ல விளையாட்டு வீரராகவும் இருந்தார். ஹாக்கி, கிரிக்கெட், நீச்சல், வாட்டர் போலோ, கூடைப்பந்து, குத்துச்சண்டை மற்றும் பளுதூக்குதல் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். குத்துச்சண்டை வீரராக, 1932-இல் ‘ஆவ் பூன் பார்’ கோப்பையை வென்றார். பளுதூக்குதலில், அவர் 1933 இல் தேசிய இலகுரக சாம்பியனானார்.

விக்டோரியா ப்ரிட்ஜ், ராஃபிள்ஸ் ஆகிய பள்ளிகளில் சிறந்த மாணவராக படித்து வந்தார். ராஃபிள்ஸ் பள்ளியில் பயிலும் போது, மாணவப் பத்திரிகையான ‘ரஃப்ளேசியனி’ன் (Rafflesian ) இணை ஆசிரியராக இருந்தார். யூசுஃப் இஷாக், சட்டப்படிப்புக்காக லண்டன் செல்ல விரும்பிய போது, அவரின் அப்பா அனுமதிக்கவில்லை. தான் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் எனத் தீவிரமாக இருந்தவரை, காலம் சிறந்த பத்திரிகையாளராக அடையாளம் காட்டியது. ஆம், தனது 20 நண்பர்களுடன் இணைந்து ‘உத்துசான் மலாயு’ எனும் மலாய் பத்திரிகையை ஆரம்பித்தார். இந்தப் பத்திரிகை ஆங்கிலேய ஆட்சியின் போது வெளிவந்த முதல் மலாய் பத்திரிகை எனும் பெருமையைப் பெற்றது.

அவரது பள்ளி நாட்களைப் போலவே, பத்திரிகையாளர்களுக்கான உபகரணங்கள் வாங்குவது முதல் வரவு செலவுகளை நிர்வகிப்பது வரை அனைத்தையும் அவரே செய்தார். இந்தச் செய்தித்தாள் முதன்முதலில் 29 மே 1939 அன்று வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை, உள்ளூர் மலாய் சமூக மக்களிடம்  கல்வியின் முக்கியத்துவம் குறித்து அடிக்கடி பேசிவந்தது. அதேபோல், மலாய் சமூக மக்களிடம் முற்போக்கான நவீன சிந்தனைகளையும் விதைத்து வந்தது. இந்தப் பத்திரிகை மிகப் பெரும் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் யூசுஃப் புகழ் மெல்ல மெல்ல பரவியது.

இந்தநிலையில், இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் மீது ஜப்பான் போர் தொடுத்து வென்றது. இதனால், பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குள்ளானது. ஜப்பான் அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட அனுமதித்தனர். ஜப்பான் போரால், உத்துசான் மலாயு பத்திரிகை நிலைகுலைந்து போனது. பத்திரிகை அலுவலகம் மூடப்பட்டது. ஜப்பானிய பத்திரிகைக்கு உத்துசானின் உபகரணங்கள் விற்கப்பட்டது. கேமராவை விற்ற பணத்தில், மலேசியாவின் தைபிங் நகருக்குச் சென்ற யூசுஃப், சில காலம் மளிகைக் கடை நடத்தி வந்தார். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானை பிரிட்டன் விரட்டியது. போருக்குப் பிறகு சிங்கப்பூர் சென்று மீண்டும் பத்திரிகை தொழிலை தொடர்ந்து நடத்தினார்.

1959 ஆம் ஆண்டு, மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவன உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்த யூசுஃப், சிங்கப்பூரின் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்ற அப்போதைய பிரதமர் லீ குவான் யூவால் அழைக்கப்பட்டார். இதை ஏற்ற யூசுஃப், உத்துசான் மலாயு பத்திரிகை பொறுப்பில் இருந்து விலகி, தனது நாட்டுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட தன்னை முழுமனதுடன் ஒப்புவித்தார். மே 1959 இல் தேர்தலில் பிஏபி வெற்றி பெற்றபோது, யூசுஃப் இஷாக் மாநிலத் தலைவருக்கான முதல் தேர்வாக இருந்தார். அதே ஆண்டு டிசம்பர் 3 அன்று, சிங்கப்பூர் தேசிய கீதம் முதன்முதலில் நிகழ்த்தப்பட்டபோது, யூசுஃப் இஷாக், ‘நெகரா’ அல்லது மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களுக்கு மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவது அப்போதைய வழக்கம்.

மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்த போதும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த போதும் யூஃசுப் மிக முக்கியத் தலைவராக அங்கம் வகித்தார். சிங்கப்பூர் மலேசியாவிடம் இருந்து தனியே வந்ததற்குப் பிறகு ‘நெகரா’ பதவிமுறை காலாவதியானது. அதையொட்டி, 09 ஆகஸ்ட் 1965-ல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது தேசத்தின் முதல் குடியரசுத் தலைவராக யூசுஃப் பொறுப்பேற்றுக் கொண்டார். இடையிடையே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்ட யூஃசுப், அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் பணி ஆற்றிவந்தார். இந்நிலையில் தீவிர நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூசுஃப், சிகிச்சைப் பலனின்றி 1970 நவம்பர் 23 அன்று மறைந்துவிட்டார்.

சிங்கப்பூரின் முதல் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளில் இருந்த யூசுஃப் பின் இஷாக்கிற்கு உரிய மரியாதையை சிங்கப்பூர் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், 29 ஜூலை 1966 அன்று, ‘யூசுஃப் இஷாக்’ பெயரில் உயர்நிலைப் பள்ளியை மறைந்த பிரதமர் லீ குவான் இயூ திறந்து வைத்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய தின விழாவின் போது பேசிய பிரதமர் லீ செய்ன் லூங், ‘உட்லண்ட்ஸ் நகரில் யூசுஃப் இஷாக் பெயரில் மசூதி திறக்கப்படும்’ என அறிவித்து 2017-ம் ஆண்டு திறந்து வைத்தார். மேலும், தென்கிழக்காசியர்களுக்கான கல்வி (ISEAS) நிறுவனத்தை, ‘ISEAS யூசுஃப் இஷாக் கல்வி நிறுவனம்’ எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது சிங்கப்பூர் அரசு. இதற்கெல்லாம் முன்னோடியாக, 1999-ம் ஆண்டு முதல் முன்னாள் குடியரசுத் தலைவர் யூசுஃப் பின் இஷாக்கின் உருவப்படம் தாங்கிய ரூபாய்த் தாளை வெளியிட்டு வருகிறது.

நமது நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் யூசுஃப் அவர்களின் பிறந்த நாளில் அவரின் நினைவைப் போற்றுவோம்.

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.