தடை அதை உடை! – பல சரித்திரம் படைத்த அதிபர் ஹலிமா யாகூப் கடந்து வந்த பாதை!

 

1965-ம் ஆண்டு, சிங்கப்பூர் தனி நாடாக உருவெடுத்த போது, ‘சிங்கப்பூர், மலாய் நாடாகவோ, சீன நாடாகவோ, இந்திய நாடாகவோ ஒருபோதும் இருக்காது. இது அனைவருக்குமான நாடாக இருக்கும்’ என்று மறைந்த பிரதமர் லீ குவான் சூளுரைத்தார். லீ குவான் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2017-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹலிமா யாகூப். சிங்கப்பூரின் முதல் பெண் (முஸ்லீம்) நாடாளுமன்ற உறுப்பினர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர், சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் போன்ற பல ‘முதல்’களுக்குச் சொந்தக்காரர் ஹலிமா யாகூப். ஆனால், அவரின் கடந்த காலம் வலி நிறைந்தவையாக இருக்கிறது. சுமைகளையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு சாதனை படைக்கும் கலைகளை கற்றுத்தேர வறுமை அவருக்கு வகுப்பெடுத்திருக்கிறது.

ஹலிமா யாகூப், இந்திய வம்சாவளி தந்தைக்கும் மலாய் தாய்க்கும், 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பிறந்தார். இவருக்கு, நான்கு பேர் உடன்பிறந்தவர்கள். இவர் பிறந்த சில ஆண்டுகளில் இருந்து, மிக ஏழ்மையான நிலையில் குடும்பம் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஹலிமாவின் தந்தை வாட்ச்மேன் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஹலிமாவுக்கு சரியாக எட்டு வயது இருக்கும்போது, அப்பா மாரடைப்பால் காலமாக, குடும்பமே நிர்க்கதியாக நின்றது. ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன் என ஹலிமாவின் அம்மா கவலையில் ஆழ்ந்தார். பிறகு, கிடைத்த வேலையைச் செய்து குழைந்தைகளைக் கரை சேர்க்கவேண்டும் எனத் துணிந்தார்.

Madam Halima With Her Mom

அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உறுதுணையாக இருந்தார் ஹலிமா. நேரம் கிடைத்தால், பள்ளியில் இருந்து வந்து அம்மா செய்யும் பணிகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார். மளிகைக் கடை, பாத்திரம் கழுவுவது, சாப்பாடு கடைகளில் உணவு பரிமாறுவது எனப் பல வேலைகளில் அம்மாவுக்கு துணையாக இருந்தார். இதனால், பள்ளிப் படிப்பு முடிவுக்கு வரும் நிலை உருவானது. ஆனால், ஹலிமா படிப்பில் கெட்டிக்காரராக இருந்ததால் தப்பித்துக் கொண்டார். ஒரே நேரத்தில், பாத்திரம் கழுவவும் செய்தார் பாடம் படிக்கவும் செய்தார். அப்போதெல்லாம், ஹலிமாவின் ஒரே கனவு, ‘படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்குச் சேர வேண்டும். கைநிறைய சம்பாரித்து, உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்’ என்பதுதான்.

பல கட்டப் போராட்டங்களுக்கு நடுவே பள்ளிப் படிப்பை திறம்பட முடித்தார் ஹலிமா. சட்டம் பயில விரும்பினார். மேற்படிப்புக்காக, சிங்கப்பூர் தேசிய பலகலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. 1978-ம் ஆண்டு வெற்றிகரமாக தனது இளங்கலை வழக்கறிஞர் பட்டம் பெற்றார். அத்துடன், படிப்புக்கு மூட்டை கட்டி வைக்கவில்லை. படித்தார், படித்தார் படித்துக் கொண்டே இருந்தார். முதுகலை வழக்கறிஞர் படிப்பை 2001-ல் நிறைவு செய்தார். மிகச் சிறந்த வழக்கறிஞராக வலம் வந்தார். இந்த நேரத்தில், அதாவது 2016-ம் ஆண்டு, ஹலிமாவுக்கு ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கி கவுரவித்தது சிங்கப்பூர் தேசிய பலகலைக்கழகம். இப்படித் தன் துறையில் அசைக்கமுடியாத ஆளுமையாக மாறினார் ஹலிமா.

அவரது வாதத் திறமையால், தேசிய தொழிற்சங்க காங்கிரசில் சட்ட அதிகாரியாகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும், சிறப்பாகச் செயல்பட்டார் ஹலிமா. அதையடுத்து, 1992-ல், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் சட்ட சேவைகள் துறையின் இயக்குனர் பதவியும் ஹலிமாவை தேடிவந்தது. அதையொட்டி, (ஆங் டெங் சியாங்) தொழிலாளர் ஆய்வுக் கழகத்தின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். இப்படிப் பல துறைகளில் பணியாற்றத் தொடங்கினார். வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி வாரியம் உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாகச் செய்துவந்தார்.

2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார் ஹலிமா. அதற்கு, அவர் தேர்ந்தெடுத்த பாதை, மக்கள் செயல் கட்சி (PAP). மிகத் தீவிரமாக உழைத்தார். அவருக்கு பெண்கள் மத்தியில் ஒரு செல்வாக்கு இருந்தது. சரியாக, பத்தாண்டுகள் கழித்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதுதான் சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு பெண் அமைச்சராகப் பதவியேற்கும் முதல் நிகழ்வு. அமைச்சர் பணியிலும் தனது வழக்கமான பணியைச் சிறப்பாக மேற்கொண்டார் ஹலிமா. அப்போது, ‘ஹலிமா ஒரு பெண். அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், அவரது குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வது’ எனும் விமர்சனம் எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இந்த கேள்வி ஏன் ஆண்களை நோக்கி வைக்கப்படுவதில்லை. குழந்தைகளைப் பராமரிப்பது ஆண்களின் கடமையுமல்லவா’ என்று எதிர்க் கேள்வி கேட்டார். மொத்த கூட்டமும் கப்சிப் ஆனது.

இதன் பிறகு, 2013-ம் ஆண்டு அவரின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் விதத்தில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட அத்தனை வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஹலிமா, சபாநாயகர் பதவிக்கு தலையசைத்தார். சிங்கப்பூரின், முதல் பெண் சபாநாயகர் எனும் பெருமையும் இலவச இணைப்பாக ஹலிமாவை தேடிவந்தது. வழக்கம்போல் திறமையுடன் சபையை நடத்திவந்தார் ஹலிமா. 2017-ம் ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிட ஹலிமா விரும்பினார்.

ஹலிமா தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர். ஆனால், ஹலிமாவை தவிர போட்டியிட்ட இருவரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அதவாது, தொழிலதிபர்களின் வேட்புமனுக்களில் போதிய தகவல்கள் இல்லாத காரணத்தால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன எனக் காரணமும் சொல்லப்பட்டன. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது ஹலிமாவுக்கு ஆதரவான செயல், இது ஜனநாயகமற்ற செயல் எனும் விமர்சனங்கள் இன்றளவும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஹலிமா போட்டியின்றித் தேர்வானார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் எனும் பெருமையும் அவர் வசப்பட்டது.

ஹலிமா தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஹலிமாவின் இந்த வெற்றிக்கு அவரது அம்மா எப்படி ஒரு முக்கியப் பங்கோ அதைப் போலவே அவரது கணவரின் பங்கும் அலாதியானது. பல்கலைக்கழக தோழரான முஹமது அப்துல்லாவை திருமணம் செய்துகொண்டார் ஹலிமா. இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். ஐந்து வருடம் சிறுகச் சிறுக சேமித்துத்தான் ஒரு வீடு வாங்கினர். மிக எளிய வாழ்க்கை முறையையே ஹலிமா- அப்துல்லா தம்பதியினர் கையாண்டு வருகின்றனர். ஹலிமா அதிபரான பிறகும், மக்களுடன் மக்களாக பொது அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் வசித்து வந்தார். பாதுகாப்பு காரணங்களால், அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. முதலில் மறுத்தவர் பிறகு அதிகாரிகள் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் தலையசைத்தார்.

ஒரு சாதாரண வாட்ச்மேனின் மகளாகப் பிறந்து ஒட்டுமொத்த சிங்கப்பூர் தேசத்தையும் காவல் காக்கும் பெண்ணாக உயர்ந்து நிற்கும் திருமதி ஹலிமா யாகூபின் வெற்றி சாமானியர்களின் வெற்றி, பன்முகக் கலாச்சாரத்தின் வெற்றி, சிங்கப்பூரின் வெற்றி.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மேடம் ஹலிமா யாகூப்..!

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.