சிங்கப்பூருக்கு புதுப் பெயர்.. தலையசைத்த அதிகாரிகள்.. நிபந்தனை விதித்த ஜப்பான்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு

அது நாற்பதுகளின் தொடக்கக் காலம். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் மெதுவாக நடை பழகிக் கொண்டிருந்த நேரம். துறைமுகம், உட்கட்டமைப்பு என அனைத்திலும் மெது மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென, போலந்து மீது ஹிட்லரின் ஜெர்மனி போர் தொடுத்தது. அவ்வளவுதான் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. அச்சு நாடுகள், நேச நாடுகள் என உலக நாடுகள் பிரிந்து இரு அணிகளாய் நின்றன. பிரிட்டன், சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நேச நாடுகளாகவும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அச்சு நாடுகளாகவும் பிரிந்தன. இந்த இரு பிரிவுகளின் கீழ் உலக நாடுகள் பல அணிவகுத்தன. போரின் விளைவாக, பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூர் மீது ஜப்பான் போர் தொடுத்தது.

சிங்கப்பூரை கைப்பற்ற வந்த ஜப்பானியர்களுக்கும் சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே 8 முதல் 15 நாட்கள் வரை போர் நடந்தது. போரில் மிகப் பெரிய கொடூரங்களை அரங்கேற்றியது ஜப்பான். உதாரணமாக, அலெக்சாண்ட்ரா மருத்துவமனை சம்பவம் ஒன்றே போதும். 1942 பிப்ரவரி 14 அன்று பிரிட்டிஷ் மருத்துவமனையான அலெக்சாண்ட்ரா மருத்துவமனை அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. செவிலியர்களும் மருத்துவர்களும் சுழன்று சுழன்று நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். ஜப்பான் படையினரால் பாதிக்கப்பட்ட பலர் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். வேறு சில நோயாளிகளும் இருந்தனர். ஜப்பானிய ராணுவம் மருத்துவமனையை நோக்கி வந்தது. விபரீதத்தை உணர்ந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஓடிச் சென்று வெள்ளைக் கொடி காட்டினார். அமைதிக்கான வெள்ளைக் கொடி ரத்தத்தில் நனைந்தது. ஆம், அந்த அதிகாரியின் தலையை சீவி எறிந்து முன்னேறியது ஜப்பான் படை.

மருத்துவமனைக்குள் நுழைந்ததும், காயமடைந்து படுத்த படுக்கையாக இருந்த பிரிட்டன் படை வீரர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போருக்கு சம்மந்தமே இல்லாமல், நோய் வாய்ப்பட்டு படுத்திருந்த மற்ற நோயாளிகளும் அர்த்தமே இல்லாமல் மரணித்துப் போயினர். ஜப்பான் படையினரின் கோரத் தாண்டவத்திற்கு அவசரச் சிகிச்சை பிரிவு நோயாளிகளும் தப்பவில்லை. இத்தனை உயிர்களை குடித்தும் பசி அடங்காத ஜப்பான் படை, சுமார் 200 மருத்துவமனை ஊழியர்களை கடத்திச் சென்று அடைத்து வைத்து அடுத்த நாள் கொன்றது. இது ஜப்பானின் அட்டூழியத்துக்கு ஒரு சோறு பதம்.

இரண்டாம் உலகப் போருக்காக, உலகின் பல நாடுகளுக்கும் வீரர்களை அனுப்பியது பிரிட்டன். இதனால், சிங்கப்பூரில் போதிய படைகள் இல்லாமல் திணறிய பிரிட்டன் வீரர்கள், எளிதில் ஜப்பானிடம் வீழ்ந்தனர். விளைவு, 1942 ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி சிங்கப்பூரில் ஜப்பான் ஆட்சி ஏற்பட்டது. சுமார் 80,000 பிரிட்டிஷ் வீரர்கள் போர்க் கைதிகளாகியினர். இது, “தங்கள் சாம்ராஜ்யத்தின் மாபெரும் நஷ்டம். மிகப் பெரிய சரணடைவு” என்று பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அறிக்கை வெளியிட்டு ஆதங்கப்பட்டார்.

இவ்வளவு எளிதில் ஜப்பானிடம், பிரிட்டன் சரணடையும் என சிங்கப்பூர் மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இதுவரை பிரிட்டன் அரசு மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்தது. இன்னொருபுறம், சிங்கப்பூரை சின்னா பின்னமாக்கியது ஜப்பான் ராணுவம். ராணுவ ஆட்சி மக்களை வாட்டி வதைத்தது. பல்லாயிரக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். காரணங்கள் ஏதுமின்றி வண்டி வண்டியாக சீனர்களை அழைத்துச் சென்று கொன்று புதைத்தது ஜப்பான் படை.

ALAXANDRA HOSPITAL

இவ்வளவு நடந்தும், தனது தாக்குதலை தொடந்தது ஜப்பான். தாக்குதலை கைவிடுவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தது. அதாவது, பிரிட்டன் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத் தளவாடங்கள், வீரர்கள், கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியது. மறுப்பு சொல்ல முடியாத சூழலில், வேறு வழியின்றி சோர்ந்த முகத்துடன் சம்மதம் தெரிவித்தது பிரிட்டன் படை.

சிங்கப்பூரை கைப்பற்றியதும், ஜப்பான் செய்த முதல் வேலை சிங்கப்பூருக்கு ‘ஷோநோண்ட’ எனப் புதிய பெயர் சூட்டியதுதான். இதற்கு ‘தெற்கின் ஒலி’ எனப் பொருள் சொல்லப்பட்டது. புதிய பள்ளிக் கூடங்கள் திறந்து ஜப்பான் மொழிப் பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. குழந்தைகளுக்கு கட்டாயப் பாடமாக அவைகள் திணிக்கப்பட்டன. திரையரங்கில் ஜப்பானிய படங்களே திரையிடப்பட்டன. செய்தி ஊடகங்கள் போர்ச் செய்திகளை சொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டன. இன்னொரு பக்கம் அரிசி விலை விண்ணைத் தொட்டது. மக்கள் அடிப்படைத் தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறினர். உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. இப்படியே மூன்றரை ஆண்டுகள் கடந்தது.

“சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு

1945-ம் ஆண்டு ஆகஸ்டு 06-ம் நாள், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுகளை வீசியது. உடல்களும் மனிதமும் அணுகுண்டுகளால் சிதறியது. இன்றும் அதன் தாக்கம் ஜப்பானை ஆட்டுவிக்கிறது. ஒருவழியாக ஜப்பான் உலகப் போரில் சரணடைந்தது. இதனால், ஜப்பானை வீழ்த்திய பிரிட்டன், மீண்டும் சிங்கப்பூரை தத்தெடுத்துக் கொண்டது. பின்னர், 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால், மக்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். பிரிட்டன் அரசை இனியும் நம்பிப் பலனில்லை. நமக்கான அரசை நாமே அமைக்க வேண்டும் எனும் குரல்கள் வலுக்கத் தொடங்கியது. இதனால், அதிருப்தியடைந்த பிரிட்டன் அரசு, சிங்கப்பூர்வாசிகளின் கருத்துக்கு தலையசைத்தது. ஆனால் சுதந்திரம் கொடுக்க முன்வரவில்லை. பதிலாக, சுயாட்சி அதிகாரம் கொடுத்தது.

CHANGI CHAPEL AND MUSEUM

ஜப்பான் ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூர் நிலைகுலைந்துவிட்டது. ஜப்பான் ஏற்படுத்திய சேதாரம் ஏராளம். இதிலிருந்து மீளும் வழி தெரியாமல், மக்கள் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர். இதன் பிறகு சிங்கப்பூர் வேறொரு யுத்தத்திற்கு தயாராக வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

சிங்கம் சிலிர்த்தெழும்…

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.