“சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு

 

ஒரு காலத்தில் காற்று மட்டுமே குடியிருந்த சிங்கப்பூரில், இன்று கால்வைக்க முடியாத அளவுக்கு ஜனத்திரள் பிதுங்கி வழிகிறது. அப்போது, இங்கு படிக்க வருவோருக்கும் பணி நிமித்தமாக வருவோருக்கும் சில மைல் தூரத்திலேயே ‘குடியுரிமை’ காத்திருந்தது. இன்றோ, சிங்கப்பூரில் சாதாரண ஒரு வேலை கிடைப்பது கூட எட்டாக் கனியாகியுள்ளது. ‘எதுவும் இல்லை’ எனும் நிலையில் இருந்து ‘என்ன வேண்டும்?’ எனும் நிலைக்கு சிங்கப்பூர் உருமாறியுள்ளது. பல நாடுகளும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சிங்கப்பூர் வளர்ந்து நிற்கிறது.

ஆண்டாண்டு காலமாக பேரரசுகள், சுல்தான்கள், போர்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், கடற்கொள்ளையர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஜப்பானியர்கள் போன்ற பல தரப்பினரால் நசுக்கப்பட்ட சிங்கப்பூர், சில காலத்திற்கு முன்புவரை, தான் பெரிதும் நம்பிய மலேசியாவாலேயே புறக்கணிக்கப்பட்டது. ஏமாற்றங்களையும் நெருக்கடிகளையும் கடந்த காலத்தில் வரவு வைத்துக்கொண்ட இந்த குட்டி தேசம், இன்று உலகிற்கே உதாரணமாக உயர்ந்து நிற்கிறது. சரிவுகளில் இருந்து எழுந்து ஃபீனிக்ஸ் பறவையாய் சிறகு விரிக்கிறது சிங்கை. எப்படிச் சாத்தியப்பட்டது இந்த தலைகீழ் மாற்றம்? இந்த நிலைக்கு சிங்கப்பூர் உயர உந்தித் தள்ளிய மந்திரவிசை எது? வராலற்றுப் பார்வையுடன் இதற்கான பதிலை தேடுவோம். வாருங்கள்.

சிங்கப்பூர் சில புரிதல்கள்: 

சிங்கப்பூரின் தொடக்கக் காலப் பெயர் ‘துமாசிக்’ என்று கூறப்படுகிறது. துமாசிக் சிங்கப்பூராக மாறியதற்கு பல்வேறு சம்பவங்கள் காரணமாகக் கூறப்படுகிறது.

11-ம் நூற்றாண்டில் கடாரத்தை வென்ற ராஜேந்திர சோழன், ‘துமாசிக்’ தீவுக்கு வந்து தங்கியதாகவும் அப்போது இந்தத் தீவுக்கு ‘சிங்கபுரம்’ எனப் பெயர் வைத்ததாகவும் அந்தப் பெயரே காலப்போக்கில் ‘சிங்கப்பூர்’ என மாறியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

அதேபோல, சுமத்ரா இளவரசன் திரிபுவனன் ‘துமாசிக்’கிற்கு வந்த போது சிங்கம் போன்ற ஒரு விலங்கை கண்டதாகவும் அதனால் ‘சிங்கபுரம்’ எனப் பெயர் சூட்டியதாகவும் மாலாய் மொழியில் வெளியான ‘செஜரா மெலாயு’ எனும் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. இப்படி இன்னும் பல பெயர்க் காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் ராஜேந்திர சோழன் ஆளுகைக்கும், பிறகு விஜய நகரப் பேரரசின் ஆளுகைக்கும் உட்பட்டு இருந்த சிங்கப்பூர் 1365-ஆம் ஆண்டு மஜாபாகித் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பிறகு தாய்லாந்து நாட்டின் ஆளுகைக்கு கீழ் சில காலம் இருந்தது. பிறகு, மலாக்கா அரசனான இஷ்கந்தர் ஷா தாய்லாந்திடம் இருந்து சிங்கப்பூரை மீட்டான். இதன் பிறகு, சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பை ஒரு சுல்தானிடம் ஒப்படைத்தான். சில காலங்கள் உருண்டோடியது.

ராபிள்ஸ் வந்தார் சிங்கப்பூர் தந்தார்:

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலாக்கா மன்னனின் ஆதிக்கத்தில் இருந்த சிங்கப்பூரை போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றினர். அப்போது, சிங்கப்பூர் கடற்கொள்ளையர்களின் புகலிடமாக மாறியதாகச் சொல்லப்படுகிறது.

வியாபாரத்திற்காக பல நாடுகளில்  கடைவிரித்த கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் உலகெங்கும் உச்சம் தொட்டிருந்தது. வணிகம் செய்ய நாடுகளுக்குள் நுழையும் பிரிட்டிஷ்காரர்கள் அந்நாட்டின் ஆட்சியில் மூக்கை நுழைப்பர். பின்னர், அதிகாரம் செலுத்தத் தொடங்குவர். பிறகு நாட்டை எழுதி வாங்குவர். இப்படி, பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய பிரிட்டிஷார்கள் பினாங்கு, மலாக்கா உள்ளிட்ட முக்கிய இடங்களையும் கைப்பற்றினர். பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் சர் தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ் என்பவரை பணியில் அமர்த்தி, சிங்கப்பூரை கைப்பற்ற கட்டளையிட்டது பிரிட்டன் அரசு.

அந்தச் சமயத்தில், சிங்கப்பூர் ஜோஹூர் சுல்தான் வசம் இருந்தது. இதை அறிந்த கவர்னர் ராபிள்ஸ், சுல்தானின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தார். சுல்தானின் வாரிசுகளுக்கு இடையே பதவிப் போர் உச்சத்தில் இருந்ததை அறிந்து கொண்ட ராபிள்ஸ், மூத்த மகன் உசேனுக்கு தூண்டில் போட்டார். மூத்த மகன் உசேனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவதாக வாக்கு கொடுத்தார். சொன்னது போலவே அவரை அடுத்த சுல்தானாக பதவியேற்கவும் செய்தார். இதற்கு, அன்பளிப்பாக உசேனிடம் இருந்து ஆண்டுக் குத்தகையாக சிங்கப்பூரை எழுதி வாங்கினார்.

பிறந்தது நவீன சிங்கப்பூர்:

சில காலங்கள் உசேன் சிங்கப்பூரை ஆண்டுவந்தார். பிறகு பிரிட்டன் தனது நரி குணத்தைக் காட்டியது. சிங்கப்பூரில் பேரம் பேசி வணிகம் செய்வதை விட சிங்கப்பூரையே பேரமாக பேசினால் என்ன எனும் விபரீத சிந்தனை ராபிள்ஸுக்கு தோன்றியது. எனவே, ஆண்டுக் குத்தைகையை ரத்து செய்து மொத்தத் தொகைக்கு சிங்கப்பூரை பேரம் பேசினார். ஆனால், உசேன் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ராபிள்ஸ் ஆட்சிப் பிடிக்கும் நோக்கில் சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்திருந்தாலும், அவருக்கு மிகப் பெரிய ஒரு துறைமுகப்பட்டினமாக இந்த தேசத்தை மாற்ற வேண்டும் எனும் ஆசை இருந்தது.

இங்கு துறைமுகம் அமைத்தால் பலவிதத்தில் அது பிரிட்டிஷ் அரசுக்கு லாபமாக இருக்கும் என அவர் எண்ணினார். தீவிரமாகக் களமிறங்கினார் ராபிள்ஸ். பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உசேன் சமாதானம் ஆனார். விளைவு, 1819-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி சுல்தான் வாரிசான உசேனுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி சார்பில் ஆளுநர் ராபிள்ஸ் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.

இதன்பிறகு, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு பணியாட்கள் கொண்டுவரப்பட்டு சிங்கப்பூரை செப்பனிடும் பணி தொடங்கியது.  ஆள் நடமாட்டம் பெரிதும் இல்லாத சிங்கப்பூரை ராபிள்சுடன் இணைந்து செதுக்கியதில் பினாங்கு நாராயணன் பிள்ளையின் பங்கு முக்கியமானது. தீவின் கட்டமைப்புகள் மாறி வருவதைத் தொடர்ந்து மக்கள் தொகையும் உயர்ந்தது. இதுவரை வெறும் ஆயிரமாக இருந்த மக்கள்தொகை அடுத்த ஆண்டே லட்சம் தொட்டது. இதையடுத்து, ராணுவ அதிகாரிகளை பணியமர்த்தியது பிரிட்டிஷ் அரசு.

இருண்ட காலம்:

சிங்கப்பூரில் நவீன துறைமுகம் கட்டியெழுப்பப்பட்டது. இதை முழுக்க முழுக்க பிரிட்டனின் சுயநலத்துக்காக ராபிள்ஸ்  செய்திருந்தாலும் சிங்கப்பூரின் வளர்ச்சியும் இதில் அடங்கியிருந்ததை மறுக்கமுடியாது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத்தை தொடங்கியது சிங்கப்பூர். எனவே, இப்பகுதி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவுத் துறைமுகமாக மாறியது. இதற்கிடையில், 1826-ல் மலாக்கா மற்றும் பினாங்குடன் சிங்கப்பூரை இணைத்த கிழக்கிந்திய கம்பெனி, இதற்கு ‘ஸ்ட்ரைட் செட்டில்மெண்ட்’ எனப் பெயரிட்டது.

1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. பிறகு, 1867 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் கொண்டுவரப்பட்டது. சிங்கப்பூர் வளர்ச்சிக்கான முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கிய போதுதான், ஜப்பான் சிங்கப்பூரை குறிவைத்தது. ஆம், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஜப்பான் சிங்கப்பூர் மீது போர் தொடுத்தது.

சிங்கம் சிலிர்த்தெழும்..

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.