சாங்கி விமான நிலையத்தில், விமான டிக்கெட்டுகளில் ஏற்பட்ட தவறின் காரணமாக 6 பெண்கள் 12 மணி நேரம் சிக்கித் தவித்தனர்..!

6 women stranded at Changi Airport for 12 hours after entering names wrongly on flight tickets

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுகளில் பெயர்கள் தவறாக இருந்ததால் 6 பெண்கள் சுமார் 12 மணி நேரம் சிக்கித் தவித்தனர்.

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திலிருந்து 6 பெண்கள் சீனாவின் சன்யா நகரத்திற்கு பயணம் மேற்கொள்ள இருந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, போர்டிங் பாஸில் ஏற்பட்ட தவறு காரணமாக அந்தப் பெண்களின் விடுமுறை திட்டங்கள் அனைத்தும் வீணாய் போனது.

சீன செய்தி நாளேடான லியான்ஹே வான்பாவ் (அக்.13) கூறுகையில், செப்டம்பர் 12 ஆம் தேதி அதிகாலை 3:55 மணிக்கு ஆறு பெண்கள் Guangzhou செல்ல இருந்தனர். அங்கிருந்து அவர்கள் சன்யாவுக்கு பயணிக்க இருந்தனர்.

அந்தப் பெண்களின் முதல் மற்றும் கடைசி பெயர்களை தங்கள் போர்டிங் பாஸில் தவறாக நிரப்பியதால் அவர்கள் அனைவரும் சாங்கி விமான நிலையத்தில் உள்ள போர்டிங் கேட்டில் நிறுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயண நிறுவனத்திடம் இந்த தவறான விவரங்களை உடனடியாக திருத்தினால், மறுநாள் காலை 8 மணி அல்லது பிற்பகல் 1 மணிக்கு விமானம் அல்லது அடுத்தடுத்த விமானங்களை பிடிக்க முடியும் என்று விமான நிலைய ஊழியர்கள் அவர்களுக்கு தெரிவித்தனர்.

அவர்கள் பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் காலை 6 மணியளவில் அதாவது அவர்கள் பயணிக்க இருந்த விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து பதிலை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் சுமார் 12 மணி நேரம் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.

இந்த தவறின் காரணமாக அவர்களுக்கு சுமார் S$1,062 நட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.