“வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாள் வீட்டு தனிமை கட்டாயம்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Photo: Tamilnadu Health Minister Ma.Subramanian Official Twitter Page

இந்தியாவில் ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தகுதி வாய்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

“குடும்பங்களும், நண்பர்களும் கூடும்போது, தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!

இந்த நிலையில், சென்னையில் இன்று (25/12/2021) காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் நாளை (26/12/2021) முதல் கட்டாயம் ஏழு நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். அபாயம் உள்ள நாடுகள் (Risk Countries) மட்டுமின்றி, அபாயம் இல்லாத நாடுகளில் (Non- Risk Countries) இருந்து வரும் பயணிகளுக்கு ஏழு நாள் வீட்டு தனிமைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எட்டாவது நாள் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு வந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும்.

அபாயம் இல்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கான பரிசோதனை விகிதம் 2%- லிருந்து 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘ஒமிக்ரான்’ நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7- லிருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு ‘ஒமிக்ரான்’ அறிகுறி உள்ளது. அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவு ஐந்து நாளில் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

10 டாலர் போதும்! மலிவான செலவில் சிங்கப்பூருக்குள் பயணிக்கும் வழிமுறை – முதல் முறை வருபவர்களுக்கு கட்டாயம் பயனுள்ள தகவல்!

தமிழ்நாட்டில் ‘ஒமிக்ரான்’ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவிப்பால், சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.