சரக்குகள் வைக்குமிடத்தில் இருந்து மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் துறைமுகம் (Jurong Port) அதிக சரக்குகளை கையாண்டு வருகிறது. இது அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும். இந்த நிலையில் ஜூன் 10- ஆம் தேதி அன்று துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தக் கப்பலின் தரைதளத்திற்கு கீழே சுமார் 15 அடியில் உள்ள சரக்குகள் வைக்குமிடத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டதைக் கண்டனர். உடனடியாக அவருக்கு சிஇஆர்டி குழுவினர் (Company Emergency Response Team- ‘CERT) மருத்துவ உதவியை அளித்தனர்.

 

இது குறித்து ஜூன் 10- ஆம் தேதி அன்று மாலை 04.50 மணிக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படைக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் ஜூரோங் துறைமுகத்துக்கு விரைந்தனர்.

 

அதேபோல், ஜூரோங் தீவு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் பணியாளர்கள் (Emergency Medical Services- ‘EMS’) உள்ளிட்டோர் சரக்குகள் வைக்குமிடத்திற்கு கீழே சென்றனர். பின்னர் அந்த நபருக்கு தலையில் காயம் மற்றும் கீழ் மூட்டுகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.

 

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் உயரடுக்கு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவினர் (SCDF’s Elite Disaster Assistance and Rescue Team- ‘DART’), சிஇஆர்டி பணியாளர்களுடன் (Company Emergency Response Team- CERT) இணைந்து அந்த நபரை ஸ்ட்ரெட்சர் மூலம் கவனமாகவும், பாதுகாப்பாகவும் வெளியே கொண்டு வந்தனர். பின்பு, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் ஆம்புலன்ஸ் (SCDF Ambulance) மூலம் அந்த நபர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (National University Hospital) அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower) விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.