கொரோனா பரிசோதனை பணிகளைப் பார்வையிட்ட பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Prime Minister Of Singapore Official Facebook Page

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதேபோல், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணியையும், கொரோனா பரிசோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஆங் மோ கியோ அவென்யூ 10-ல் இருக்கும் பிளாக் 456-ல் (Block 456 Ang Mo Kio Avenue 10) வசிக்கும் நான்கு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து, பிளாக் முழுவதும் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை சுகாதாரத்துறை நேற்று (25/07/2021) காலை 09.00 மணியளவில் தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று (25/07/2021) மதியம் 12.20 PM மணிக்கு ஆங் மோ கியோ அவென்யூவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையத்திற்கு திடீரென சென்ற பிரதமர் லீ சியன் லூங், அங்கு பொதுமக்களுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனைப் பணிகளை பார்வையிட்டார். அப்போது பரிசோதனைக்காக வந்திருந்த பிளாக்கில் வசிப்பவர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார்.

அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பிளாக் 456 ஆங் மோ கியோ அவென்யூ 10 இல் வசிப்பவர்களுக்கு கட்டாயமாக ஸ்வாப் பரிசோதனைகள் (Mandatory swab tests) நடைபெற்று வருகின்றன. ஜூலை 25, ஜூலை 26 ஆகிய தேதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிளாக்கில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டன.

தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஜூரோங் மீன்பிடி துறைமுகத் தொற்று குழுமத்துடன் (Jurong Fishery Port cluster) தொடர்புடையவர்கள். இந்த பரிசோதனை பயிற்சி சமூகத்தில் நோய் பரவாமல் தடுக்க உதவும். மதிய உணவு நேரத்தின் போது நான் ஸ்வாப்பிங் தளத்தைப் பார்வையிட்டபோது செயல்பாடுகள் சீராக இயங்கின.

உங்கள் உடல்நிலையைக் கண்காணித்து, உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில் மருத்துவரை அணுக வேண்டும். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தடுப்பூசிப் போடுவதற்கும், நமது சமூகத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், நமது பங்கைத் தொடர்ந்து செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.