“எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை?”- நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

File Photo

 

சிங்கப்பூரில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்டத் துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், சிங்கப்பூரில் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்? எந்த அடிப்படையில் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினர்.

வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டத்தை முன்மொழிந்த உள்துறை அமைச்சகம்!

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது, “கடந்த செப்டம்பர் 5- ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூர் வாசிகளில் சுமார் 9,30,000 பேர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூடப் போட்டுக்கொள்ளவில்லை. இதில் 50%-க்கும் மேற்பட்டோர் 12 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள், அந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசிப் போட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. மீதமுள்ள 4,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியிருந்தும் அவர்கள் செலுத்திக் கொள்ளவில்லை. இவர்களில் 1,00,000 பேர் 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள்.

12 வயதிலிருந்து 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில் சுமார் 3,00,000 லட்சம் பேர் இன்னும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை. சுமார் 1,000 பேர் மருத்துவக் காரணங்களால் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ள முடியாமல் போனது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர், தங்களை வீட்டில் இருந்தவாறே குணமடையும் நடைமுறை அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 98%- க்கும் மேற்பட்டோருக்கு மிதமானது முதல் லேசான அறிகுறிகளே உள்ளன. அதனால் அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குணமடையலாம். சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் குணமடையும் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30- ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளதால் நாளை (15/09/2021) முதல் விரிவுபடுத்தப்படும். முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட 50 வயதுக்கும் உட்பட்டோர் இனி வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமது நாட்டு குடிமக்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தல்!

சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 88%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். இம்மாத இறுதியில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களின் இலக்கு 100% எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.