சமீபத்திய கோவிட்-19 அலை வரும் வாரங்களில் மேலும் குறைய வாய்ப்பு : சுகாதார அமைச்சர் ஓங் !

சிங்கப்பூரின் சமீபத்திய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் இந்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 1 அன்று நாடாளுமன்றத்தில் அவர் இதைக் கூறியுள்ளார். கடந்த 10 நாட்களாக நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், கடந்த வாரம் வாராந்திர தொற்று விகிதம் 0.9க்குக் கீழே குறைந்துள்ளதாகவும் ஜூலை 31, மதியம் 12 மணி நிலவரப்படி, வாராந்திர தொற்று விகிதம் 0.87 ஆக உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்றின் இந்த அலையில் அரசாங்கம் சமூகக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவில்லை. ஆனாலும் நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது சுகாதார அமைப்பில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியது என்று ஓங் கூறியுள்ளார்.

மருத்துவமனைகளில் வாழ்க்கை சாதாரணமாக இல்லை என்றும் தற்போதைய அலையின் சுமையை சுகாதார அமைப்பு தாங்கி வருவதாகவும் ஓங் கூறினார். மேலும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் பிஸியாக இருந்ததாகவும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் ஓங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வசிப்பவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் கோவிட் -19 க்கு ஆளாகியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள்தொகையின் சதவீதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) சீ கியான் பெங் தாக்கல் செய்த கேள்விக்கு ஓங் பதிலளித்தார்.