இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா? சிங்கப்பூர் வங்கி கணிப்பு..!

singapore economy

பொருளாதார மந்தநிலை தற்போதைய சூழலில் இந்திய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியாக இருந்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிக மோசமாக உள்ளது.

ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி தனது ஆய்வில் மதிப்பிட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது மத்திய அரசின் மீது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், ஜூலை – செப்டம்பர் காலாண்டிலும், இந்த முழு நிதியாண்டிலும் நாட்டின் வளர்ச்சி மிக மோசமாக இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், நோமுரா போன்ற அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

இதுபோன்ற சூழலில், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனியார் துறை செயல்பாடுகள் சிறப்பாக இல்லாததும், நுகர்வுத் துறை மந்தமாக இருப்பதாலும் இந்திய வளர்ச்சி வீழ்ச்சியைச் சந்திக்கும் சூழல் இருப்பதாக சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி காரணம் தெரிவித்துள்ளது.

மந்தமான நுகர்வு காரணமாக, அரசின் நேரடி வரி வருவாயும் மறைமுக வரி வருவாயும் குறைந்துள்ளது. உற்பத்திக் குறைபாடு, புதிய திட்டங்கள் தேங்கி நிற்பது போன்ற காரணங்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.