எமர்ஜன்சி லைட்டில் வைத்து தங்கம் கடத்தல்…. பெண் பயணி கைது!

Photo: Chennai Customs Official Twitter Page

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு விமான நிலைய அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், போதைப்பொருள் ஒழிப்புத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டத் துறை அதிகாரிகள் இணைந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாக சோதனை செய்த பின்பே விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் அக்டோபர் 14 முதல் சிறப்புவாய்ந்த bivalent தடுப்பூசி!

அந்த வகையில், நேற்று (10/10/2022) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Customs Officers) அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அந்த பெண்ணிடம் இருந்த ‘எமர்ஜன்சி லைட்டை’ (Emergency Lights) வாங்கிய அதிகாரிகள், அதனை திறந்துப் பார்த்துள்ளனர். அப்போது, அதில், காகிதங்கள் சுற்றப்பட்டிருந்த நிலையில் இருந்த தங்கக்கட்டிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், சுங்கத்துறைச் சட்டம் 1962- ன் கீழ் அவை முழுவதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண் பயணியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்.16- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா!

கடத்தப்பட்ட தங்கக்கட்டிகளின் மொத்த எடை 1.8 கிலோ என்றும், இதன் மதிப்பு 79.44 லட்சம் ரூபாய் என்றும் சென்னை மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். அந்த பதிவுடன், ‘எமர்ஜன்சி லைட்டில்’ இருந்த தங்கக்கட்டிகள் குறித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளனர்.