‘எம்பிளாய்மென்ட் பாஸ்’ வைத்திருப்போரில் இந்தியர்களின் சதவீதம் அதிகரிப்பு- மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தகவல்!

Photo: GOV.SG

 

சிங்கப்பூரில் நடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன.

 

அந்த வகையில், சிங்கப்பூர் மனித வள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் (Manpower Minister Dr.Tan See Leng) நேற்று (06/07/2021) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “சிங்கப்பூரில் எம்பிளாய்மென்ட் பாஸ் (Employment Pass- EP) வைத்து இருப்போரில் இந்தியர்களின் விகிதம் கடந்த 2005- ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த நிலையில் 2020- ஆம் ஆண்டு 25 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியால் உந்தப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் பணியாற்றும் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்கள் சுமார் 4,200 பேரை சிங்கப்பூரில் வேலை செய்யும் படி பணியமர்த்தியது. இந்த ஊழியர்களில் 12 சதவீதம் மட்டுமே, அதாவது, 500 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சிங்கப்பூருக்கு பணியிட மாறுதல் பெற்று வருவது தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் எண்ணிக்கை கடந்த 2005- ஆம் ஆண்டு 1,12,000 ஆக இருந்த நிலையில், 2020- ஆம் ஆண்டு 3,80,000- க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை சிங்கப்பூருக்கு கொண்டு வந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு தருகிறது.

 

தொடர்பு, தகவல், நிதி போன்ற துறைகளில் உள்ள சுமார் 45,000 வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் 1,20,000 சிங்கப்பூர் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் எண்ணிக்கை இங்கு இல்லை” எனக் குறிப்பிட்டார்.