சோதனைச் சாவடியில் நிதி அமைச்சர் ஆய்வு!

Photo: Minister Lawrence Wong Official Facebook Page

 

 

கொரோனா பரவலைத் தடுக்க, சிங்கப்பூர் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரியில் ஐ.டி. உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பாதுகாப்பாகப் பணிப்புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிங்கப்பூர் முழுவதும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள துவாஸ் சோதனைச் சாவடிக்கு (Tuas Checkpoint) நேரில் சென்ற நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், அங்கு சோதனைச் சாவடி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரைச் சந்தித்தார்.

 

அப்போது, சோதனைச் சாவடியில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு செய்யப்படும் பிரீத்லிஸர் பரிசோதனை (Breathalyser Test) குறித்து ஆய்வு செய்தார். மேலும், பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். இந்த ஆலோசனையின் போது அனைவரும் பிபிஇ கிட் அணிந்திருந்தனர்.

 

இங்கு ஆன்டிஜென் ரேபிட் பரிசோதனை (Antigen Rapid Test), உமிழ்நீர் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

பொதுமக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எளிதாகக் கிடைக்க வகைச் செய்யும் வகையில், மருந்தகங்களில் கொரோனா மருத்துவ பரிசோதனை கருவிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அருகில் உள்ள மருந்தகங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை கருவியைப் பெற்று பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

 

பிபிஇ கிட், முகக்கவசம் அணிந்துக் கொண்டு முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு முகங்களில் அடையாளங்கள் (Faces Marks) இருக்கின்றன. இதன் மூலம் அவர்களின் பணி எந்த அளவுக்கு என்பது குறித்து நம்மால் அறிய முடிகிறது.