காட்டில் காணாமல்போன கணவன்-மனைவி;வந்தவழி மறந்து தவித்தவர்களின் தற்போதைய நிலை!

Photo: Jimmy Ng/Google Maps

வியட்நாமில் காட்டுக்குள் சென்ற கணவன்,மனைவி இருவரும் காணாமல் போனதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது.உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டனர்.சிங்கப்பூரைச் சேர்ந்த நபரும் வியட்நாமிய பெண்ணும் வியட்நாமின் பிடூப் நுயி-பா பூங்காவிற்கு சுற்றிப்பார்க்கச் சென்றனர்.

வனப்பகுதியில் வழிகாட்டியின்றி இருவரும் சென்றதால் அவர்கள் வந்த வழியை மறந்து காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர்.கடந்த நவம்பர் 21-ஆம் தேதியன்று இருவரும் தொலைந்து விட்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து லக்டுவாங் காவல்துறையினர் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கணவருக்கு 22 வயது , மனைவிக்கு 21 வயது என்பது தெரிய வந்துள்ளது.தம்பதியினர் டாலாட் நகரிலிருந்து டாக்ஸி மூலம் தேசியப் பூங்காவுக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தளமான பியாங் என்ற வனப் பகுதிக்குச் சென்றனர்.

காட்டுப் பாதை வழியாக வனத்திற்குள் சென்ற தம்பதியினர் வந்த வழியை மறந்து போகவே,அங்கிருந்து வெளியேறத் தெரியாமல் தவித்துள்ளனர்.பின்னர் மீட்புக்குழுவினர் அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டு பியாங் சுற்றுலாத் தளத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

இருவரின் நிலைமையும் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சுற்றுலா வழிகாட்டியின்றி வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.