பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் மறைவு- சிங்கப்பூர் பிரதமர் இரங்கல்!

Photo: Prime Minister Of Singapore Lee Hsien Loong

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ (Former Philippines President Benigno Aquino), ஜூன் 24- ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61. இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்னனர்.

 

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ மறைந்த செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். இருவரும் பலமுறை சந்தித்துள்ளோம். அவரை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 2014- ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூர் வருகை தந்தார். எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஆசியான் (ASEAN) மற்றும் அபெக் (APEC) பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டோம். முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக சேவையாற்றினார்.

 

அவர் பிரதிநிதிகள் சபையிலும், பின்னர் செனட்டிலும், பின்னர் அதிபராகவும் பணியாற்றினார். அவரது குடும்ப வரலாறு- பெற்றோர் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசியலில் முக்கிய தலைவர்கள் ஆவர். அவர் பிலிப்பைன்ஸுக்கு ஸ்திரத்தன்மையையும், விரைவான பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு வந்தார். மேலும், தனது நாட்டு மக்களின் வாழ்க்கையையும், நல்வாழ்வையும் மேம்படுத்தும் கொள்கைகளைப் பின்பற்றினார். என் இதயம் அவரது குடும்பத்தினருக்கும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் செல்கிறது. அவரது மறைவு பிலிப்பைன்ஸுக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மறைந்த முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ, பிலிப்பைன்ஸ் நாட்டின் 15- வது அதிபராக கடந்த 2010- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரைப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.