அரசுப் பள்ளிகளின் முதல்வர்களைப் பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பிய பஞ்சாப் அரசு!

Photo: Punjab Chief Minister Bhagwant Mann Official Twitter Page

பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களைப் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சிங்கப்பூர் வானிலை – மழை பெய்யும் அதேசமயம் சூடாக இருக்கும்… வானிலை மையத்தின் முன்னறிவிப்பு!

இந்த திட்டத்தின் கீழ், பஞ்சாப் மாநில பள்ளிக் கல்வித் துறையானது 2022- 2023- ஆம் நிதியாண்டில் சிங்கப்பூரில் உள்ள பிரின்சிபல்ஸ் அகாடமிக்கு (Principals Academy) 36 அரசுப் பள்ளிகளின் முதல்வர்களையும், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய கல்வி நிறுவனத்திற்கு 30 அரசுப் பள்ளிகளின் முதல்வர்களையும் அனுப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், முதற்கட்டமாக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 36 அரசுப் பள்ளிகளின் முதல்வர்களை சிங்கப்பூரில் உள்ள பிரின்சிபல்ஸ் அகாடமிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாநில முதலமைச்சர் பகவந்த் மான், பள்ளி முதல்வர்கள் அமர்ந்திருந்த பேருந்தை கொடியசைத்து, விமான நிலையத்திற்கு வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர்கள், பள்ளிக்கல்வித்துறையின் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊழியர்களை இவ்வாறு நடத்தக்கூடாது… நடப்புக்கு வரும் புதிய விதி – மீறினால் வேலை அனுமதி சலுகைகள் ரத்து

விமான நிலையத்திற்கு சென்ற பள்ளி முதல்வர்கள், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றடைந்தனர். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் பிப்ரவரி 6- ஆம் தேதி முதல் பிப்ரவரி 10- ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் அரசுப் பள்ளி முதல்வர்கள், வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி அன்று பஞ்சாப் திரும்புகின்றனர்.

அரசுப் பள்ளி முதல்வர்களின் சிங்கப்பூர் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் பஞ்சாப் அரசு ஏற்றுள்ளது.

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு அதிநவீன முறையில் கற்பித்தல்- கற்றல் முறை, ஆடியோ- விஷுவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முறைகள் குறித்த பயிற்சி பஞ்சாப் மாநில அரசுப் பள்ளிகளின் முதல்வர்கள் அளிக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.