குறிப்பிட்ட பானங்களின் விளம்பரத்துக்கு தடை விதித்தது சிங்கப்பூர்; உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற்றது..!!

War on diabetes: Unhealthy label for high-sugar drinks, total ban on ads to be introduced in Singapore

சிங்கப்பூர் குறிப்பிட்ட சில பானங்களின் விளம்பரத்துக்கு தடை விதித்துள்ளது.

உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இனிப்பு மிகுந்த பானங்களின் விளம்பரங்கள் ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஆன்லைனில் இடம் பெற தடை விதிக்கப்படும்’ என்ற அறிவிப்பின் மூலம், விளம்பர தடையை அமல்படுத்தும் உலகின் முதல்நாடு என்ற பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது.

சர்வதேச சர்க்கரை நோயாளிகள் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், உலகில் 42 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், இது வரும் 2045ல் 62.90 கோடியாக அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், வளர்ந்த நாடுகளிடையே அதிகபட்சமாக, சிங்கப்பூரில் 13.7 சதவீதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இனிப்பு மிகுந்த பானங்களுக்கு ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஆன்லைன் ஆகியவற்றில் விளம்பரம் வெளியிட சிங்கப்பூர் அரசு விரைவில் தடை விதிக்க உள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுகாதாரமற்ற பானங்களின் லேபிளில், அதில் உள்ள ஊட்டச்சத்து பொருட்கள், சர்க்கரையின் அளவு தெரியும்படி குறிப்பிடப்பட வேண்டும். மிகவும் சுகாதாரமற்றதாக அடையாளம் காணப்படும் பானங்களின் விளம்பரங்கள் ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஆன்லைனில் இடம் பெற தடை விதிக்கப்படும்.

விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைவதை தடுக்கும் வகையில் இந்த விளம்பர தடை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக சர்க்கரைக்கு வரி அல்லது தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது.

எனவே, இனிப்பு பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவை குறைக்கவோ அல்லது பானத்தில் சேர்க்கும் மூலப்பொருட்களை சீர்படுத்தவோ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விளம்பர தடை குறித்து தொழில் நிறுவனங்களின் கருத்துகள் கேட்டறியப்பட்ட பின்னர், அடுத்த சில மாதங்களில் இவை அமல்படுத்தப்படும். இதனை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து அடுத்தாண்டு அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.