புதுப்பிக்கப்பட்ட சீக்கிய கோயில் திறப்பு விழாவில் பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்பு!

Photo: Prime Minister Of Singapore Lee Hsien Loong Official Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள சிலாட் சாலையில் (Silat Road) அமைந்துள்ள சீக்கிய குருத்வாரா கோயில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று (03/07/2021) திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கோயிலில் வழிபட்ட பிரதமர், சீக்கிய அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, சீக்கிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான இந்திரஜித் சிங் (Chairman of the Coordinating Council of Sikh Institutions), பிரதமருக்கு ஆரஞ்சு நிற சாரூபா (Orange Colour Saroopa) மற்றும் பாரம்பரிய வாள் கிர்பனை பரிசாக வழங்கினார்.

 

“புதுப்பிக்கப்பட்ட சீக்கிய கோயில் (Sikh Temple) திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. பிற மதக் குழுக்களைப் போலவே, சீக்கிய தலைவர்களும் தங்கள் வழிபட்டாளர்களுக்கு தொற்றுநோயால் ஏற்படும் இடையூறுகளைச் சரி செய்ய உதவியுள்ளனர். தொற்றுநோயால் ஏற்படும் மன அழுத்தங்களை நிவர்த்திச் செய்வதற்காக, சீக்கிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு ‘திட்ட அகால்’ (Project Akaal) என்ற பணிக்குழுவை அமைத்துள்ளது. இந்த கடினமான கால கட்டத்தில் இனம், மதம், பின்னணி ஆகியவற்றைப் பாராமல் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச உணவை வழங்கி வருகின்றனர். இந்த முயற்சிகள் பரந்த சமூகத்திற்கு சிறந்த முன் மாதிரியாக அமைகின்றன. சிலாட் சாலை சீக்கிய கோயில் ஒரு புனித வழிபாட்டு தலம் மட்டுமல்ல. சிங்கப்பூரின் பல இனம் மற்றும் பல மத நிலப்பரப்பில் பிரகாசிக்கும் சின்னம். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் சீக்கிய சமூகத்திற்கு மீண்டும் வாழ்த்துகள்” என்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

 

இந்த விழாவில், சீக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து சிங்கப்பூர் பிரதமர் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.