சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவிலுள்ள நகைக் கடை பங்குதாரருக்கு $63,000 அபராதம்..!

Jewellery shop partner fined $63k over role in GST tourist refund scam

சுற்றுப் பயணிகள் வரியைத் திரும்பப்பெறும் மின்னியல் முறையில் (இடிஆர்எஸ்) நடந்த மோசடி தொடர்பாக லிட்டில் இந்தியா நகைக்கடை பங்குதாரர் ஒருவருக்கு $63,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அபிராமி ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் பங்குதாரர் பழனியப்பன் ராமநாதனுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

$14,000 பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) முறைகேடாகத் திரும்பப்பெற சிங்கப்பூரரான ராமநாதன், 41, தமது கடை ஊழியர்கள் ஆறு பேருடன் சேர்ந்து சதி செய்ததாக அது குறிப்பிட்டது. ஜிஎஸ்டி ஒழுங்கு விதிகளின்கீழ் தம்மீது சுமத்தப்பட்ட 35 குற்றச்சாட்டுகளை ராமநாதன் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கப்பட்டபோது இதர 39 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இந்த மோசடிச் சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்ட கடைசி நபர் இவர்.

கடந்த ஜூலை மாதம் கடை ஊழியர்களான குலமணி கணேசன், 31, சண்முகம் சம்பத்குமார், 33, மாணிக்கவாசகம் சரவணன், 41, முருகேசன் சரவணன், 42, பாங் வெய் கூன், 46, ஆறுமுகம் செல்லதுரை, 49, ஆகியோருக்கு இதே குற்றச்சாட்டுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத் தொகை $1,500க்கும் $12,000க்கும் இடைப்பட்டதாக இருந்தது.

இவர்களில் பாங் வெய் கூன் மட்டும் மலேசியர். மற்று ஐவரும் இந்தியாவைச் சேர்நதவர்கள். கடந்த 2015, 2016 ஆண்டுகளில் மோசடிச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய ஐந்து இந்திய நாட்டவர்கள் முறைகேடாக ஜிஎஸ்டி தொகையைத் திரும்பப் பெற்றனர். அந்தக் குற்றங்களுக்காக கடந்த 2017ம் ஆண்டு கோதண்டராம் ஞானம், 29, கருணாநிதி ராஜேஷ், 32, கருணாநிதி சரவணன், 37, ராமையன் கார்த்திகேயன், 44, வைத்தியலிங்கம் கருணாநிதி, 61, ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்தனை பேரும் சேர்ந்து மொத்தமாக $167,000 ஜிஎஸ்டி மோசடி செய்ததாக இதற்கு முன்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்திருந்தது.

சட்டவிரோத மோசடிச் கும்பலைச் சேர்ந்தவர்கள் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள நகைக்கடைகளில் உண்மையிலேயே நகை வாங்கியோரின் ரசீதுகளைப் பெற முயன்று வந்தனர். அபிராமி ஜுவல்லர்ஸின் இரு நகைக்கடைகளும் அவற்றில் அடங்கும்.