ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் பெயர் காரணம் மற்றும் தோன்றிய வரலாறு – சிறப்பு பார்வை..!

Sri Layan Sithi Vinayagar Temple

ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவிலின் நான்காவது குடமுழுக்கு விழா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது.

ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் கட்டடம் அதிகாரபூர்வமாக 1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய தேசிய இராணுவத்தின் இந்தியச் சிப்பாயாகிய திரு. பொன்னம்பல சுவாமிகள் என்பவர் விநாயகர் சிலை ஒன்றைத் தமது சொந்த வழிபாட்டுக்காக சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தார்.

அவர் அந்தச் சிலையை சிங்கப்பூர்ப் பொதுமருத்துவமனை அருகே உள்ள சிப்பாய் லைனில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர், பல இந்து பக்தர்கள் அங்கு சென்று வழிபடத் தொடங்கினர்.

அப்பகுதி மருத்துவமனைக்கு வருவோர் என அனைவரும் வழிபட தொடங்கிய காரணத்தினால் இந்தியா திரும்பிய பொன்னம்பல சுவாமிகள், அந்த விநாயகர் சிலையை அங்கேயே விட்டு சென்றார்.

இதற்கான பொறுப்பை தமக்கு நம்பிக்கையுள்ள நகரத்தார் சமூகத்தினரிடம் ஒப்படைத்துவிட்டுத் அவர் திரும்பினார்.

அதன் பிறகு, 1920 நகர மேம்பாட்டின் ஓர் அங்கமாக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது. அதனால் சிலை இருந்த நிலப்பகுதியை அரசாங்கம் கையகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து, அந்த நகரத்தார் சமூகத்தினர் தற்போது கோவில் அமைந்துள்ள கியொங் சைக் ரோட் நிலத்தை வாங்கி கோவிலை அங்கு எழுப்ப முடிவெடுத்தனர்.

இறுதியாக, 1925ஆம் ஆண்டு விநாயகர் சிலை அங்கு நிறுவப்பட்டது. சிப்பாய் லைனில் இருந்து வந்தவர் என்பதன் நினைவாக கோவிலுக்கு ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோவில் எனப் பெயர் பெற்றது.