லாரிகளில் கடத்திக் கொண்டு வரப்பட்ட இ- வேப்ரைசர்ஸ்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

Photo: ICA Official Facebook Page

 

கடந்த ஜூன் 7- ஆம் தேதி அதிகாலை 04.00 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள துவாஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் குடியேற்றத்துறை மற்றும் சோதனைச் சாவடிகளின் ஆணையத்தின் அதிகாரிகள் (Singapore Immigration And Checkpoints Authority Officers) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த மலேசிய நாட்டு பதிவெண் கொண்ட ஏழு லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் முதலில் ஒரு லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் லாரியின் முன்பகுதியில் உள்ள பயணிகள் இருக்கையின் பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தப்பட்ட இ- வேப்ரைசர்ஸ்கள் (E- Vaporisers and Components) மற்றும் அதன் கூறுகளைக் கண்டுபிடித்தனர்.

 

அதைத் தொடர்ந்து மற்ற ஆறு லாரிகளை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். அதிலும் பயணிகளின் இருக்கைக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்தக் கடத்தப்பட்ட இ- வேப்ரைசர்ஸ்கள் மற்றும் அதன் கூறுகளைக் கண்டுபிடித்தனர். இவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

ஏழு லாரிகளின் 14 ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை விசாரிப்பதற்காக சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு (Health Sciences Authority- ‘HSA’)அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

 

இத்தகைய தயாரிப்புகளை இறக்குமதிச் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10,000 டாலர் அபராதம் அல்லது அதிகபட்ச சிறைத்தண்டனை ஆறு மாதங்கள் விதிக்கப்படும் அல்லது அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிங்கப்பூரின் எல்லைகளை குடியேற்றத்துறை மற்றும் சோதனைச் சாவடிகளின் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல், கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தீவிர வாகன சோதனையையும் நடத்தி வருகின்றனர்.