உலகளவில் வெளிநாட்டினருக்கான மிக விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர்..!

சிங்கப்பூர் வெளிநாட்டினருக்கான இந்த பட்டியலில் ஐந்து இடங்கள் முன்னேறி, உலக அளவில் 13வது விலையுயர்ந்த நகரமாக மாறியுள்ளது. மேலும், ஆசிய தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் உலகளவில் துர்க்மெனிஸ்தானில் அஷ்கபாட் முதலிடத்தைப் பிடித்துள்ளது, கூடுதலாக ஆசிய தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற ஆசிய நாடுகள் டோக்கியோ (2), ஹாங்காங் (6), யோகோகாமா (8) மற்றும் நாகோயா (10). சியோல் 16வது இடத்தையும், மக்காவ் 18வது இடத்தையும், ஷாங்காய் 22வது இடத்தையும் பிடித்துள்ளன.

சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகளை ஈ.சி.ஏ இன்டர்நேஷனல் கடந்த செவ்வாயன்று (டிசம்பர் 10) வெளியிட்டது. இது உள்ளூர் அல்லாத ஊழியர்களுக்கான நகரங்களில் வாழ்க்கைச் செலவை, அதாவது நுகர்வோர் பொருட்கள் மற்றும் பலசரக்கு பொருட்கள், ஆடை மற்றும் ஓய்வு நடவடிக்கைகள் போன்ற சேவைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது.