தேசிய தின பேரணி உரையை ஆற்றவிருக்கும் சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Singapore Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

 

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. மேலும், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரின் தேசிய தினம் (National Day Of Singapore) வரும் ஆகஸ்ட் மாதம் 9- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகளை அரசு செய்து வருவதால் சிங்கப்பூர் களைகட்டியுள்ளது. தேசிய தின அணிவகுப்பும், சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தேசிய தின அணிவகுப்பில் சுமார் 1,200 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.

 

1966- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் தேசிய தின பேரணி உரையை ஆற்றுவது வழக்கம் ஆகும். இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, பேரணி உரை ரத்துச் செய்யப்பட்டது. அதற்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றியிருந்தார்.

 

இந்நிலையில், ‘வரும் ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தேசிய தின பேரணி உரையை (National Day Rally 2021) ஆற்றுவார். இந்த நிகழ்வு மீடியாகார்ப் (Mediacorp) அரங்கில் நடைபெறும்’ என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் உரையில் கொரோனா பாதிப்பு, பொருளாதாரம், நாட்டின் எதிர்கால இலக்குகள், கொரோனா தடுப்பூசி, தொழிலாளர்கள் நலன் உள்ளிட்டவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தேசிய தின பேரணி உரை நிகழ்வு முதல் ஸ்டார்ஸ் அவென்யூவில் (1 Stars Avenue) உள்ள மீடியாகார்ப் வளாகத்தில் நடைபெறுவது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.