கடலோரங்களில் குவியும் குப்பைகள் -சிங்கப்பூர் போன்ற தீவு நாடு எதிர்கொள்ளும் கடலோர குப்பை பிரச்சனை

கடல் மற்றும் கடற்கரையோரங்களில் குவியும் குப்பைகளை அகற்றும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது. கடல் மற்றும் கடற்கரையோரங்களில் வீசப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கடல் குப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் தீவிரப்படுத்துகிறது.

2021 ஆம் ஆண்டில் தேசிய சுற்றுப்புற வாரியம் 10 கடலோரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிப் பைகள், மரக்கிளைகள் உள்ளடங்கிய கிட்டத்தட்ட 4009 டன் கழிவுகளை அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.குவிந்து வரும் குப்பைகளை அகற்ற நேற்று தேசிய உத்தி செயல் திட்டம் தொடங்கப்பட்டது.

நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட சிங்கப்பூர் போன்ற தீவு நாடு ,கடலோரங்களில் குவியும் குப்பை பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியமானது என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டெஸ்மன்ட் டான் கூறினார்.

தானா மேரா கடற்கரையில் நேற்று நடைபெற்ற குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சியின்போது தேசிய உத்தி செயல் திட்டம் பற்றி விவரித்தார்.

கடலில் சேரும் குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமன்றி நம்முடைய வாழ்விட சூழலும் பாதிப்படையும் என்று துணை அமைச்சர் தெரிவித்தார். ஒருமுறை உபயோகப்படுத்தி விட்டு கழிக்கப்படும் பொருள்களின் புழக்கத்தை குறைப்பதன் மூலம் கடலில் சேரும் குப்பைகளின் அளவை குறைக்க இயலும்.

கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்துதல், கடல்வாழ் உயிரினங்களுக்கு குப்பைகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் போன்றவை தொடர்பான சோதனை முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூர் கடல் குப்பை பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.