காரணமின்றி பலமுறை பிரேக்கைப் பயன்படுத்திய கார் ஓட்டுநர் – ஆத்திரத்தில் நடுவிரலை காட்டிய பேருந்து ஓட்டுநர் !

bus captain middle finger

ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை, மற்றொரு சாலைப் பயனாளியிடம் தனது நடுவிரலைப் காட்டியதாக ஒரு பேருந்து ஓட்டுநர் மீது எழுந்த புகாருக்கு SBS Transit பதிலளித்துள்ளது.

பேருந்து ஓட்டுநர் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள SBS, சாலைப் பயனாளியால் பகிரப்பட்ட காட்சிகள் சாலை சந்திப்பில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும், SBS பேருந்து ஓட்டுநருக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் அத்தகைய ஆத்திரமூட்டும் சூழ்நிலையிலும் அமைதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதாக கூறியுள்ள SBS ட்ரான்சிட்டின் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தகவல்தொடர்புகளின் துணைத் தலைவர் கிரேஸ் வூ, தனியார் கார் டிரைவரால் பகிரப்பட்ட காட்சிகள் நேற்று காலை போக்குவரத்து சந்திப்பில் நடந்ததை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்பது அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

இரண்டு வாகனங்களும் போக்குவரத்து விளக்குகளில் நிறுத்தப்பட்டபோது, ​​தனியார் கார் ஓட்டுநர் பேருந்தின் வலதுபுறத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்தின் முன் நகர்ந்த தனியார் கார் ஓட்டுநர், காரணமின்றி பலமுறை பிரேக்கைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் கார் ஓட்டுநர் அவ்வாறு செய்ய வேண்டிய போக்குவரத்து நிலைமைகள் இல்லை என்பதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர் கோபத்தில் நடுவிரலையும் உயர்த்தியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறிய வூ, பேருந்து ஓட்டுநர் ஆத்திரமூட்டும் சூழ்நிலையில் கூட அமைதியாக இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.