“ரிவர் வேலி பள்ளியின் மாணவர்கள், ஊழியர்கள் ‘கேர்’ மையத்தை நாடி மனநல ஆலோசனை”- கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தகவல்!

Photo: Education Minister Official Facebook Page

ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் (River Valley High School) மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Education Minister Chan Chun Sing) இன்று (27/07/2021) விளக்கமளித்தார்.

அதில், “காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவரும், உயிரிழந்த மாணவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் என்பது தெரியவந்தது. 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மனநல மதிப்பீட்டிற்காக ரிமாண்டில் உள்ளார். இந்த பள்ளியில் கேர் மையம் (Caring Action in Response to Emergencies- ‘CARE’) என்னும் அவசர ஆதரவு மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மையத்தை பள்ளியின் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 540 பேர் நாடி உளவியல் ரீதியான மனநல ஆலோசனைப் பெற்றுள்ளனர்.

இப்பள்ளி அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டு வர அதிக காலமாகலாம். பள்ளி மாணவர்களே தாங்களாக முன்வந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகப் பரிவுடன் நடந்துக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மாணவர்கள் அன்பளிப்புகளையும், உணவுகளையும் பரிமாறிக் கொண்டனர். சம்பவம் நடந்த மறுநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பதால் பள்ளி மூடப்பட்டிருந்தப் போதிலும், அன்றைய தினம் உடனடியாக உதவி தேவைப்படுவோருக்காக கேர் மையம் (Caring Action in Response to Emergencies- ‘CARE’) அமைக்கப்பட்டது.

ரிவர் வேலி ஹை பள்ளியில் நடந்தது என்ன?- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த கல்வி அமைச்சர்!

ஜூலை 21- ஆம் தேதி அன்று ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்ப விரும்பிய மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு வராத மாணவர்களை ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோரின் தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொண்டு, மாணவர்களின் நலன் குறித்து விசாரித்தனர். விடுப்பு தேவைப்படும் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சான் சுன் சிங், “ரிவர் வேலி உயர்நிலை பள்ளியின் ஆலோசனைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களும் பள்ளியைச் சுற்றி திரண்டுள்ளனர். இவை அனைத்தும் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி சமூகத்தின் இரக்கத்தையும், வலிமையையும் பேசுகின்றன” என்றார்.