‘கொரோனா வைரஸை ஆஸ்திரேலியா மிகச்சிறப்பாக கையாண்டுள்ளது’- சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு!

Photo: Prime Minister Of Singapore Official Twitter Page

 

6- வது சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா தலைவர்களின் ஆண்டு கூட்டத்தில் (6th Singapore- Australia Annual Leaders Meeting) பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசு முறை பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று (10/06/2021) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்யை ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் நேரில் சந்தித்தார்.

 

இதில், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, எதிர்காலத்திற்காக இரு நாடுகளை வலுவாக நிலைநிறுத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம், மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து இரு நாடுகளிடையே மீண்டும் இருவழி பயணத்தைத் தொடங்குவது, உலகளாவிய முன்னேற்றங்கள், கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்டவைக் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசித்தனர்.

 

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கடந்த ஆண்டு சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா தலைவர்கள் கூட்டம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, காணொளி மூலம் நடைபெற்றது. எனவே, இன்று பிரதமர் ஸ்காட் மோரிசனை நேரில் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆஸ்திரேலியா இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளது. பிரதமர் மோரிசன் என்னை ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.