மலேசியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

Photo: Malaysia Anwar Ibrahim Official Twitter Page

மலேசியா நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான 15- வது பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, புதிய அரசு அமைப்பது தொடர்பாக, இரண்டு பெரிய கட்சிகளின் அரசியல் பிரமுகர்களை அழைத்து கூட்டணி ஆட்சியை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“10 வயது சிறுவன் மற்றும் 73 வயது பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

ஆனால் இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததால், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தையை மன்னர் நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை மலேசியா நாட்டின் புதிய பிரதமராக மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா நியமித்தார்.

பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், அன்வர் இப்ராஹிம் கட்சி 82 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் முஹிதீனின் கட்சி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றாவாளிக்குப் பதிலாக அதிகாரி பாட்டிலில் சிறுநீர் கழித்த விவகாரம்! – உண்மை வெளிச்சத்துக்கு வந்தது!

மன்னரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மலேசியா நாட்டின் 10- வது பிரதமராக அன்வர் இப்ராஹிம், நவம்பர் 24- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.00 மணியளவில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மலேசியா நாட்டின் புதிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 15- வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மலேசியாவின் 10- வது பிரதமராக பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நமது இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் நமது இருதரப்பு உறவை எவ்வாறு மேலும் முன்னேற்றுவது என்பது குறித்து விவாதிக்க விரைவில் உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.