தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 15 டேங்க் சாலையில் (15 Tank Road) அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). இக்கோயிலில் தைப்பூச திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

தைப்பூசம் திருவிழா: ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்!

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தைப்பூசத் திருவிழா, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 4- ஆம் தேதி அன்று நள்ளிரவு முதலே சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் உடன் நடைப்பயணமாக, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், ரத காவடி எடுத்தும் கோயிலுக்கு நடைப்பயணமாக வந்த வண்ணம் உள்ளனர். அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தைப்பூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகமும், இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து செய்துள்ளன. பக்தர்களின் உதவிக்காக தொண்டூழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் முதல்வர்களைப் பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பிய பஞ்சாப் அரசு!

தைப்பூசத் திருநாளன்று, பிற்பகல் வேளையில் கனமழை பெய்த நிலையிலும், பக்தர்கள் மழையில் நனைந்தவாறு முருகனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.