COVID -19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை இம்மாதம் 40,000 வரை உயரலாம்..!

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இம்மாதம் 30,000 அல்லது 40,000 வரை எட்டலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் நிலைமை கைமீறிப் போகாமல் இருக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உதவும் என்றும் அவர்கள் கூறிள்ளனர்.

மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இந்த எண்ணிக்கை அண்மையில் நிலைத்தன்மை அடையத் தொடங்கியிருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹொக் (Saw Swee Hock) பள்ளியின் ஆய்வுக்கான துணை வேந்தர், இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் (Alex Cook) தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தின் முடிவுக்குள் 20,000 சம்பவங்கள் வரை பதிவாகலாம் என அவர் முன்னதாகவே கணித்திருந்தார்.

இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதை ஒப்புக்கொண்ட மவுன் எலிசபெத் (Mount Elizabeth) மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம் (Dr Leong Hoe Nam) அதே நேரத்தில் தினசரி எண்ணிக்கையின் உச்சத்தை சிங்கப்பூர் தாண்டியிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: COVID -19: முஸ்தபா மையம் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது..!

ஜனவரி 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 10,000க்கு உயர்ந்தது. ஆனால் அதனைவிட குறுகிய காலக்கட்டத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை இரு மடங்கானது. நேற்றைய கணக்கெடுப்புபடி இந்த எண்ணிக்கை 20,000 தாண்டியுள்ளது. இந்நோயைத் தொற்றியுள்ளோரில் பெரும்பாலானோர் ஊழியர்கள் தங்குமிடங்களைச் சேர்ந்தவர்கள்.

அடையாளப்படுத்துவது, தனிமைப்படுத்துவது, தொடர்புகளின் தடங்களை அறிவது மற்றும் கண்காணிப்பது உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் தங்கும் இடங்களிலும், வெளியிலும் ஏற்படும் கிருமித்தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படலாம் என்று தேசிய பல்கலைக் கழகத்தின் யோங் லூ லின் (Yong Loo Lin) மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் பால் தம்பையா தெரிவித்துள்ளார்.

இந்த வழிமுறைகள் இருக்கும் பட்சத்தில் பிப்ரவரியில் சமூகப் பரவல் எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்குக் குறைந்ததுபோல இம்முறையும் மீண்டும் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த அணுகுமுறையின் விரிவாக்கம் ஊழியர் தங்குமிடத்திலும் வேலை செய்யும், என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 741 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!