ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Prime Minister Of Singapore Official Facebook Page

 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 23- ஆம் தேதி தொடங்குகிறது.

 

இந்த நிலையில், ஒலிம்பிக் (Tokyo 2020 Olympics) மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில் (Paralympic Games) சிங்கப்பூர் சார்பில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்களுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று (13/07/2021) காணொளி மூலம் கலந்துரையாடினார்.

 

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த தொற்றுநோய் விளையாட்டுக்குத் தயாராகும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக அமைந்துள்ளது. எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். மாறிவரும் சூழலுக்கேற்ப, வீரர்களின் ஆர்வமும் மீள்திறனும் ஊக்கமளிக்கிறது.

 

இந்த ஆண்டில் பல புதிய முகங்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளன. குறிப்பாக, சிங்கப்பூரைச் சேர்ந்த 21 விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகமாகிறார்கள். அவர்கள் முதன்முறையாக டைவிங் (Diving), குதிரையேற்றம் (Equestrian), மராத்தான் நீச்சல் (Marathon Swimming) மற்றும் பவர் லிஃப்டிங் (Powerlifting) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கிற்கான எங்கள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த என்னுடன் சேருங்கள் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறினார்.