கட்டுமான இடத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த நபர்!

Photo: Screengrab From Logos South East Asia/Youtube

 

 

கடந்த ஜூன் 10- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள துவாஸ் (Tuas) வட்டாரத்திற்கு உட்பட்ட இடத்தில கட்டப்பட்டு வரும் கிடங்கு ஒன்றின் கட்டுமான இடத்தில் ஆண் நபர் உயிரிழந்துக் கிடந்தார். அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

 

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, 20 துவாஸ் சவுத் அவென்யூ 14-ல் (20 Tuas South Avenue 14) நடந்த அந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு ஜூன் 10- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (Singapore Civil Defence Force- ‘SCDF’) மற்றும் மருத்துவக் குழுவினர் சென்றனர். பின்பு, கட்டுமான இடத்தில் கிடந்த நபரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. உயிரிழந்த நபருக்கு வயது 25. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

 

சம்பவம் நடந்த இடம் லோகோஸ் துவாஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் (Logos Tuas Logistics Hub) கட்டப்பட்டு வரும் இடம் ஆகும். இந்த கட்டுமான இடம் பாடாங்கின் (Padang) அளவை விட ஆறு மடங்கு பெரியதாக உள்ளது. கட்டுமான பணிகள் முடியுறும் போது அங்கு ஓர் இரண்டு மாடி கிடங்கும், மற்றொரு நான்கு மாடி கிடங்கும் இருக்கும். முதல் கட்ட கட்டுமானம் நடப்பாண்டின் நான்காம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிறுவனத்தின் இணையதளத்தின் படி, கட்டிடத்தின் முதல் தளத்தில் அனுமதிப் பெற்ற ஆபத்தான பொருட்கள் சேமிப்பு இடம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடப்பாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணியிடங்களில் 14 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதேபோல், நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பணியிடங்களில் காயம் போன்ற 3,300 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.