கொரோனா வைரஸ்; புதிதாக இருவரை உறுதிபடுத்திய சிங்கப்பூர் – மொத்தம் 18 ஆக உயர்வு..!

Two more confirmed Corona virus infection in Singapore.

சிங்கப்பூரில் வூஹான் கொரோனா வைரஸ் பாதித்த இரண்டு புதிய நபர்களை நேற்று (பிப்ரவரி 01) உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 18 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் வந்து இறங்கிய மேலும் இருவருக்கு வூஹான் கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று (பிப்ரவரி 01) மாலை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட இருவரும் வூஹான் சென்று திரும்பியவர்கள் என்றும் சிங்கப்பூர் சமூகத்தில் கொரோனா கிருமி பரவியதற்கான அடையாளம் எதுவும் இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிதாக கிருமி தொற்றியதாகக் கண்டறியப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்று‌ம் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து‌ கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வூஹான் கொரோனா வைரஸ்; தொய்வின்றி தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் ஆயுதப்படை..!

மேலும், சிங்கப்பூரில் இதற்கு முன்பு உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட 16 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்றும் அவர்களில் யாருக்கும் மோசமான நிலைமை ஏற்படவில்லை. அவர்களில் பொரும்பாலானோர் தேறி வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய இரண்டு நபர்கள் :

சிங்கப்பூரில் நேற்று 17வது நபராக உறுதிசெய்யப்பட்டவர் 47 வயதுமிக்க சிங்கப்பூர் பெண்மணி ஆவார். ஜனவரி 30 ஆம் தேதி வூஹானில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். வூஹானில் விமானத்தில் ஏறியபோது அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி தென்படவில்லை. ஆனால் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், அவர் உடனடியாக தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு கொரோனா கிருமி தொற்று பரவியது வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் உறுதிசெய்யப்பட்டதாகவும் அந்த மையத்தில் அவர்‌ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 18வது நபர் சீனாவைச் சேர்ந்த 38 வயது பெண். வூஹானில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூர் வந்த அவருக்கு கொரோனா கிருமி தொற்று இருப்பது நேற்று பிற்பகல் 2 மணியளவில் உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தில் அந்தப் பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டார்.