ஜப்பானை மிகக்கடுமையாக தாக்கிய ஹகிபிஸ் சூறாவளி; சிங்கப்பூர் – ஜப்பான் இடையிலான விமானச் சேவைகள் கடுமையாக பாதிப்பு..!!

Heavy rain, winds lash Tokyo as Typhoon Hagibis hits Japan

ஜப்பானில் சூறாவளி அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், வானம் பிங்க் நிறத்திற்கு மாறி காணப்பட்டதால் ஜப்பானியர்களை கடுமையான அச்சத்தில் ஆழ்த்தியது. ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவில் ஹாகிபிஸ் சூறாவளி தாக்கியது என்றும், டோக்கியோவின் தென்மேற்கே உள்ள இசு தீபகற்பத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக மாபெரும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது என்றும் பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் இதற்கு முன்பு 1958 ஆம் ஆண்டு இதே போன்றே வானம் பிங்க் நிறத்தில் மாறியதாகவும், அப்போது உருவான சூறாவளியில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்ததாகவும், மேலும் பல்வேறு அழிவுகள் ஏற்பட்டதாகவும் ஜப்பானில் வசிக்கும் மக்கள் சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கோரத்தாண்டவத்தில் 270,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இழந்துவிட்டதாக ஜப்பானிய ஊடகமான என்.எச்.கே தெரிவித்துள்ளது.

இந்த ஹகிபிஸ் சூறாவளியால் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 10 விமானச் சேவைகள் தாமதமடைந்ததாகவும் (அல்லது) ரத்து செய்யப்பட்டதாகவும் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜெட்ஸ்டார், ஜப்பான் ஏர்லைன்ஸ், ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.