சிங்கப்பூரில் கிரேன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி வேல்முருகன்..!

velmurugan died crane accident singapore novena
velmurugan died crane accident singapore novena

நோவெனாவில் (Novena) உள்ள ஒரு பணிநிலையத்தில் கடந்த திங்கட்கிழமை (நவ. 4) கட்டுமான கிரேன் இடிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த வேல்முருகன் முத்தையா என்ற தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு சுமார் 122,000 வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நடந்த இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி டான் டோக் செங் மருத்துவமனைக்கு (TTSH) கொண்டு செல்லப்பட்டார். அன்று காலை 8.50 மணியளவில் ஜலான் டான் டோக் செங்கில்  (Jalan Tan Tock Seng) உள்ள ஒரு கட்டுமான இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், 28 வயதான வேல்முருகன் சுயநினைவு இல்லாமல் கிடந்ததாகவும், அதன் பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும், 35 வயதான தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவு அடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்னர் தான், தமது மனைவி கர்ப்பமாக உள்ளதை வேல்முருகன் அறிந்து நண்பர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான ItsRainingRaincoats, இத்தகவலை வெளியிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்த வேல்முருகன், அண்மையில் தமது திருமணத்திற்காக இந்தியாவிற்குச் சென்றிருக்கிறார்.

சிங்கப்பூர் திரும்பிய அவர், LKT Contractors நிறுவனத்தில் விபத்து நடப்பதற்கு முன், சுமார் 3 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தார். அவரின் உடல் இன்று இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ItsRainingRaincoats இணையம் வழியாக நன்கொடை திரட்டி வருகிறது.

மேல் விவரங்களுக்கு: http://itsrainingraincoats.give.asia/cranecollapsevictim எனும் தளத்தை பார்க்கலாம்.