சட்ட அமைச்சகம் (MinLaw), சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS) அதிகாரிகள் போல கடன் மோசடி – எச்சரிக்கை பதிவு..!

Police investigating Scam

சிங்கப்பூரில் நூதன முறையில் கடன் மோசடி தகவல் வெளிவந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மாதம் முதல் (செப்டம்பர்) குறைந்தது 110,000 டாலர்களை இழந்துள்ளனர், என்று சட்ட அமைச்சகம் (மின்லா) மற்றும் போலீஸார் (அக். 14) எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய இந்த சூழ்ச்சியில், மோசடி செய்பவர்கள் மின்லா அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (மாஸ்) அதிகாரிகள் அல்லது இருவரையும் போல நடித்து மோசடியில் ஈடுபடுவதாக, போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடந்த மாதம் முதல் சுமார் 20 க்கும் மேற்பட்ட போலீஸ் தரப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கடன்களை வழங்க கோரப்படாத செய்திகளுக்கு பதிலளித்த பின்னர், மோசடி கும்பல் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்கின்றனர்.

அதன் பின்னர், அவர்களுக்கு PDF ஆவணங்கள், MinLaw அல்லது MAS அல்லது இரண்டும் அறிவுறுத்துவது போல அனுப்பப்படுகிறது. மேலும், வைப்புத்தொகை மற்றும் 7 சதவிகித பொருட்கள் மற்றும் சேவை வரி ஆகியவற்றை ஒப்புதல் பெறுவதற்கு முன்பு செலுத்துமாறு அறிவுறுத்துகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள், உரிமம் பெற்ற கடன் வழங்குபவர்களுடன் (moneylender) தொடர்பு கொண்டுள்ளனர் என்று நம்பவைத்து முட்டாளாக்குவதே இதன் நோக்கம் என்று, போலீஸார் தெரிவித்துள்ளனர்.