இந்திய மரபுடைமை நிலையம்

 

தோற்றம்:

இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில், கடந்த 2015 மே மாதம் 7 ஆம் தேதி அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 21 மில்லியன் (சிங்கப்பூர் டாலர்) செலவில் கட்டப்பட்ட இந்த மரபுடைமை நிலையம், நான்கு அடுக்குகளை கொண்டுள்ளது. சுமார் ஏழு வருடங்களாகக் கட்டப்பட்ட இந்த நிலையத்தின் மொத்த பரப்பளவு 3,090 சதுர மீட்டர். இது, சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய வாரியத்தின் ஆளுகைக்கு உட்பட்டும் இந்தியச் சமூகத்தின் ஆதரவுடனும் செயல்பட்டு வருகிறது. 50 க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகள், சங்கங்கள் மற்றும் குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த மரபுடைமை நிலையம் முழு வடிவம் பெற்றது.

அமைப்பை பற்றி:

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள இந்திய மற்றும் தெற்காசிய சமூகங்களின் வரலாற்றைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். குறிப்பாக, சிங்கப்பூர் இந்தியர் அனுபவங்களை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாச்சாரம் மற்றும் கலைகளை விளக்கும் வகையிலும் மரபுடைமை நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் லீ, “இந்தியச் சமூகம் சிங்கப்பூருக்கு மிகவும் ஆழமான பங்களிப்பைச் செய்துள்ளது. இந்திய வர்த்தகர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசியாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்தனர். இதில், பண்டைய சிங்கப்பூரும் அடங்கும். அவர்கள் இந்திய மதங்கள், ஆட்சி பற்றிய கருத்துகள் மற்றும் அரசியல் அமைப்புகளை அறிமுகப்படுத்தினர். ஆதலால், இந்த மரபுடைமை நிலையம், நமது பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. இதனால், வேகமாக மாறிவரும் இந்த உலகில், நமது இடமும் அடையாளமும் அசைக்கமுடியாத ஒன்றாக நிலைத்து நிற்கும்” எனக் கூறியது சிங்கப்பூர் இந்திய மக்களிடையே நிலவும் ஒற்றுமையைக் காட்டும் விதமாக இருந்தது.

சாதனைகள்:

பாரம்பரிய இந்தியக் கட்டடக் கலையையும் நவீன கட்டடக் கலையையும் இணைத்துக் கட்டிய தனித்துவமான சின்னம், இந்திய மரபுடைமை நிலையம். ‘பாவ்லி’ (Baoli or Indian Stepwell) கட்டடக் கலையின் தாக்கம் தென்படுகிறது. இங்கு, ஐந்து நிரந்தர காட்சியகங்கள், ஒரு அருங்காட்சியகம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் உள்ளன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள முகப்பு, அனைவரையும் கவர்ந்து இழுக்கும். அழகான மரச்சிலைகள் காண்பவரை சில நிமிடம் திக்குமுக்காடச் செய்துவிடும். மொத்தத்தில், சிங்கப்பூரின் பன்முகத் தன்மையைச் சித்தரிக்கும் அருங்காட்சியகமாக இது அமைந்துள்ளது.

இந்த மையம் இதுவரை மொத்தம் 368 கலைப்பொருட்களை சேகரித்துள்ளது. இவற்றில் 200 க்கும் மேற்பட்டவை இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இந்தியச் சமூகங்களின் இடம்பெயர்வு மற்றும் குடியேற்றம் குறித்தும், கலைகளுக்கு தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பு குறித்தும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது.

முக்கியப் பணிகள்:

ஆராய்ச்சிகள் மூலம் இந்திய மரபுடைமை நிலையம் மற்றும் அதன் மதிப்புகள் பற்றிய ஆழமான புரிதலை உண்டாக்குவது, முக்கியப் பங்குதாரர்களுடன் இணைந்து இந்திய கலாச்சாரம் மற்றும் சமூக வேர்களை மேம்படுத்துவது, சிறப்பான பணிகள் மூலம்  மதிப்பிற்குரிய பாரம்பரிய நிறுவனமாக மரபுடைமை நிலையத்தை நிறுவுவது ஆகியவை இவ்வமைப்பின் முக்கியப் பணிகளாக உள்ளது.

இந்திய மரபுடைமை நிலையத்தினுள் இந்தியர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியர்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு பற்றியும் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பு பற்றியும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து வயதினருக்குமான மாதாந்திர வெளிப்புற நிகழ்ச்சிகள், கைத்தொழில் பட்டறைகள், விரிவுரைகள், சிறப்பு சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றை கலை நிறுவனங்கள் மற்றும் இந்திய அமைப்புகளுடன் இணைந்து மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்து வருகிறது.

நிகழ்வுகள்:

சிறப்புக் கண்காட்சி மற்றும் நிரந்தரக் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கண்காட்சியாக, அவ்வப்போது சில தலைப்பில், கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல, 08 மே 2015-ல் தொடங்கிய ‘நிரந்தரக் கண்காட்சிக் கூடம்’ 31 Dec 2025 வரை நடைபெற இருக்கிறது. இதன் ஐந்து முக்கியக் கருப்பொருள்கள் கீழே விளக்கப்பட்டுள்ளது,

தொடர்புகளின் தொடக்கங்கள்:  1ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை, தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் நிலவிய ஆரம்பகாலத் தொடர்புகளை மரபுடைமை ஆதாரங்களுடன் ஆராய்கிறது முதல் காட்சிக்கூடம்.

வேர்களும் வழிகளும்: 19 மற்றும் 21ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள இந்தியர்களின் குடியேற்றங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பயணம், உடை, மொழி, விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டுகிறது இரண்டாவது காட்சிக்கூடம்.

முன்னோடிகள்: 19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் வந்து சேர்ந்த ஆரம்பகால இந்திய முன்னோடிகளையும் அவர்களது தொழில்களையும் அறிமுகப்படுத்துகிறது மூன்றாவது காட்சிக்கூடம்.

சிங்கப்பூர், மலாயா இந்தியர்களின் சமூக, அரசியல் எழுச்சி: 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இந்தியாவின் காலனித்துவத்துக்கு எதிரான தேசியவாத இயக்கங்கள் சிங்கப்பூர், மலாயா இந்தியர்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்கிறது நான்காம் காட்சிக்கூடம்.

சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பு: 1950களின் பிற்பகுதி முதல் தற்போது வரை
பல்வேறு துறைகள், தொழில்கள் மூலம் நாட்டு நிர்மாணத்திற்கு சிங்கப்பூர் இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பை படம் பிடித்துக் காட்டுகிறது கடைசி கண்காட்சிக்கூடம்.

புகைப்படங்கள்:

கட்டண விவரம்:

  • சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் உண்டு. (பெரியவர்கள் S$8.00,
    60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் S$5.00, மாணவர்கள் S$5.00)
  • 6 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு மட்டும் அனுமதி இலவசம்.

செயல்படும் நேரம்:

  • செவ்வாய் – வியாழன்: காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
  • வெள்ளி – சனி: காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
  • ஞாயிறு / பொது விடுமுறை: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
  • திங்கட்கிழமை விடுமுறை.

தொடர்புகொள்ள:

இந்திய மரபுடைமை நிலையம்,

5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924

தொலைப்பேசி : (+65) 6291 1601

மின்னஞ்சல்: NHB_IHC@nhb.gov.sg

https://www.indianheritage.gov.sg/ta

LOCATION ON GOOGLE MAP

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகும் சிங்கப்பூர்!

Editor
இந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட இந்திய மரபுடைமை நிலையமும் தயாராகிவிட்டது....