தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

சிங்கப்பூரில் “தமிழைக் கற்கவும், அன்றாட வாழ்க்கையில் அதனைப் பயன்படுத்தவும் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதோடு, இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைப் பேணிக் காப்பதையும் தலையாய நோக்கமாகக் கொண்டு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது” என்ற கொள்கை பிரகடனத்தோடு 2-8-1980ல் துவங்கப்பட்டதுதான் சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம்.

கொள்கை முழக்கம் செய்தவர் கழகத்தின் முதல் மேலாண்மைக் குழுத் தலைவரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளராகவும் பின்னாளில் சிங்கப்பூரின் அதிபராகவும் திகழ்ந்த, மறைந்த திரு. சி வி தேவன் நாயர் அவர்கள்.

தொடங்கிய நோக்கமும் வரலாறும்

இதற்கு முன், 09-4-1977ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூரில் தமிழ்மொழி மற்றும் கலாசாரம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய திரு தேவன் நாயர் தமிழ்மொழி இந்தியப் பண்பாடு இவற்றைக் கட்டிக்காக்க ஒரு வலுவான இயக்கம் தேவை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ் பேசும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து தமிழ்மொழியின் முன்னேற்றத்துக்காக ஓர் அமைப்பை உருவாக்குவார்களாயின், அது மிகவும் பயனுடையதாக அமையும். இது குறுகிய மொழிவெறி கொண்டதாக அமையாமல், தொன்றுதொட்டு வரும் இந்தியப் பண்பாட்டுச் செல்வங்கள், சீன, மலாய் மரபுகளிலிருந்து நாம் பெறக்கூடிய சிறந்த பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து நின்று வருங்காலச் சிங்கப்பூரை உருவாக்குவதற்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

கழகம் துவங்கப்பட அடிப்படையாக அமைந்த நிகழ்ச்சி இதுதான். இதனைத் தொடர்ந்து திரு சி வி தேவன் நாயர் தலைமையில் ஒரு முன்னிலைக் குழு அமைக்கப்பட்டு சட்டதிட்டங்கள் வகுத்து அமைப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை 11-09-79 ல் செய்தது.

Verified by MonsterInsights