உலகின் மிகச்சிறந்த ஸ்டீலை உருவாக்கியது பண்டைய தமிழர்களே – பெருமைப்பட வைக்கும் பெங்களூரு பேராசிரியர் ரிப்போர்ட்

Wootz எஃகு அல்லது டமாஸ்கஸ் எஃகு என்பது பண்டைய உலகின் அதிசயங்களில் ஒன்றாகும். வூட்ஸ் எஃகு என அழைக்கப்படும் எஃகு அலாய் (தமிழ் வார்த்தையான ‘உருக்’ என்பதிலிருந்து பெறப்பட்டது) இன்றும் உலோகவியலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

டமாஸ்கஸ் எஃகில் தயாரிக்கப்பட்ட வாள்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை என்றாலும், இவை இந்தியாவில் உருவாக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

கிமு 6 ஆம் நூற்றாண்டில், இந்த மிகச்சிறந்த உலோகக்கலவைகள் தமிழ்நாட்டின் சேர சாம்ராஜ்யத்தில் பயன்படுத்தப்பட்டு, அது அங்கிருந்து வெகுதூரம் பரவியிருக்கிறது.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த எஃகு, சூடாக இருக்கும் இரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்து, பெங்களூரு தேசிய மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் (NIAS) பேராசிரியர் ஷரதா சீனிவாசன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றுவரை ஆரம்பகால உலோகவியல் கண்டுபிடிப்புகள் சில தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் காணப்படுகின்றன. இவை, இப்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. தனது ஆராய்ச்சிக்காக, பேராசிரியர் ஷரதா சீனிவாசன் இந்த கலைப்பொருட்களை மிக நெருக்கமாக ஆய்வு செய்தார்.

மரம் போன்ற கார்பனேசிய பொருட்களுடன் இரும்பை சேர்த்து, உலைகளில் அதிக வெப்பநிலையில் சுடுவதன் மூலமும் மட்டுமே இந்த வகை உயர் எஃகு அடைய முடியும். அதாவது, 1,400 டிகிரி செல்சியசுக்கு குறையாமல் நீண்ட காலத்திற்கு சுட வைத்து இந்த வகை எஃகினை தமிழர்கள் உருவாக்கி இருப்பதாக தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.