சிங்கப்பூர் இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கிய நேதாஜி பிறந்த தினம்..!

Netaji Subhash Chandra Bose Birth Anniversary

Netaji Subhash Chandra Bose Birth Anniversary: இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் செம தில்லானா வீரர் இவர்.

உலகம் போற்றும் உன்னத போராளியான நேதாஜி 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ஜானகிநாத் போசுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, பிறந்தார். லண்டனுக்கு சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டின் 71வது குடியரசு தினவிழா…!

வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திரபோசுக்கு வெறுப்புகளை அதிகரித்தது. இதனால் லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

நேதாஜிக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் சந்திப்பு பின்பு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942-ம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.

அதன் பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர்.தாசை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவும் செய்தார். சி.ஆர்.தாஸ் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று ‘சுயாட்சி கட்சியை’ தொடங்கியதோடு மட்டுமல்லாமல் ‘சுயராஜ்ஜியா’ என்ற பத்திரிகையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.

1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நேதாஜி. ரவீந்திரநாத் தாகூர் அவரை அழைத்து பாராட்டு விழா நடத்தியதோடு, நேதாஜி என்ற பட்டத்தையும் வழங்கினார். காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகினார்.

காந்தியின் அகிம்சை வழியில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவரை ‘இந்திய தேசத்தின் அடையாளம்’, ‘இந்தியாவின் தேசத் தந்தை’ என முதலில் குறிப்பிட்டவர் நேதாஜி.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் களைகட்டிய தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் – முழு தொகுப்பு..!

நாட்டுக்காக 11 முறை சிறை சென்ற நேதாஜியின் வாழ்வில், 20 ஆண்டுகள் சிறையிலேயே கழிந்தன. ஆங்கிலேயருக்கு காந்தியைவிட அதிக நெருக்கடி கொடுத்தவர் நேதாஜி. அதனால் அவரைப் பல முறை நாடு கடத்தியது பிரிட்டஷ் அரசு.

ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற நேதாஜி, விடுதலைப் போராட்டத்தில் நாடு கடத்தப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கினார்.

இந்த படையில், சுமார் 85ஆயிரம் வீரர்கள் இருந்தனர். மேலும், பெண்கள் படைபிரிவையும் ஏற்படுத்தினார் இது ஆசியாவில் முதல் பெண் ராணுவப் படை என்ற பெருமை பெற்றது. தன் உயிரைப் பணயம் வைத்துச் சுதந்திரத்துக்காகப் போராடிய நேதாஜி, 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் (1942) போது நேதாஜி, ஜெர்மனியில் இருந்து கொண்டே, ‘ஆசாத் ஹிந்த் வானொலியை’ தொடங்கினார். இது பல மொழிகளில் செய்திகளையும், அவரது பேச்சுகளையும் ஒலிபரப்பியது. இவை இந்திய மக்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்த புரட்சி படையினருக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்த பயன்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கம் நாட்டு மக்களிடையை தேசிய உணர்வை தட்டி எழுப்பியது. இதனை முதன்முதலில் கூறியவர் நேதாஜி. 1941 நவ., 2ல், ஜெர்மனியில், இவரது ‘சுதந்திர இந்தியா மையம்’ துவக்க விழாவில் ‘ஜெய்ஹிந்த்’ (வெல்க இந்தியா) என்ற கோஷத்தை முழங்கினார்.

தகவல் : தமிழக ஊடகங்கள்.