கோடாரி தைலம் (Axe Oil) அன்று முதல் இன்று வரை..!

வெளிநாட்டில் இருப்பவர்களிடம் ஒவ்வொரு குடும்பமும் மறக்காமல் வாங்கி வர சொல்லும் ஒரு பொருள் உண்டு என்றால், அது நம்ம கோடாரி தைலம் தாங்க. அந்த அளவிற்கு கோடாரி தைலத்திற்கும் நம் மக்களுக்கும் ஒரு பிணைப்பு ஆண்டாண்டு காலமாய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 90 ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த இந்த தைலம் மருத்துவ உலகில் முடிசூடா மன்னனாக இருந்து வருகிறது. ஒரு சிறிய தலைவலி என்றால் கூட உடனே நம் நினைவிற்கு வருவது கோடாரி தைலம் மட்டும் தான்.

கோடாரி தைலத்தின் வரலாறு:

தோற்றம் (1928):

கோடாரி தைலத்தின் நிறுவனர் Leung Yun Chee 1928 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்தார். அப்போது ஜெர்மானிய மருத்துவர் Dr.Schmeidler என்பவரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் மருத்துவகுணம் கொண்ட எண்ணெயின் குறிப்புகள் சிலவற்றை பெற்று கொண்டார். அந்த குறிப்புகள் Axe Oil நிறுவனம் தொடங்க விதையாய் இருந்தது.

1930 :

1930 ஆம் ஆண்டுகளில் இந்த தைலத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையான வியாபார போட்டி சந்தைகளில் இருந்து வந்தது. இந்த கோடாரி தைலம் ஹாங்காங் மற்றும் சீனா நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிய சூழல் இருந்தது. அப்போது தன்னுடைய தைலத்தின் Logo வை புதுமைபடுத்த எண்ணினார். Graphic வடிவமைப்பாளர்கள் உதவியுடன் கோடாரி logo மாற்றப்பட்டது. அதன் பிறகு துண்டு சீட்டின் மூலம் தைலத்தின் பயன்களை விவரித்து சிங்கப்பூர் முழுவதும் விநியோகம் செய்தார். மாற்றப்பட்ட அந்த logo ஒரு அடையாளமாக மாறி இன்றுவரை அதன் விற்பனைக்கு முன்னோடியாக இருந்து வருகிறது.

1950 – 1970 :

1950-1970 கடல் வழியாக ஹஜ் புனித பயணம் செய்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைவலி, மயக்கம் மற்றும் பூச்சுக்கடி போன்றவற்றிற்கு இந்த தைலத்தை பயன்படுத்தினார்கள். இதன் காரணமாக வியாபாரம் அதிகரித்தது. இவருடைய முதல் வெளிநாட்டு சந்தை சவூதி அரேபியாவாக இருந்தது. 1971 ஆண்டு நிறுவனர் இறந்தபின் அவருடைய மூத்தமகன் பொறுப்பேற்றார். இன்று ஆசியாவில் சிறந்த தைலமாகவும். சிங்கப்பூரின் Heritage Brand in Singapore ஆகவும் இருந்து வருகிறது.

இன்று:

இன்று, ஆசிய கண்டத்தில் முன்னணி தைல நிறுவனங்களில் கோடாரி தைலமும் ஒன்று என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், சிங்கப்பூரில் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற முன்னணி நிறுவனங்களில் Axe நிறுவனமும் ஒன்று ஆகும்.

பொதுவான பயன்பாடு:

இந்த கோடாரி தைலம் பொதுவாக தலைவலி, மயக்கம், பூச்சிக்கடி, மூக்கடைப்பு, வயிற்று வலி, ஜலதோசம், வாத சம்பந்தமான வலிகள் மற்றும் தசை பிடிப்பு போன்றவற்றிக்கு இந்த தைலம் நிவாரணியாக பயன்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது:

◾வலி உள்ள இடத்தில் இந்த தைலத்தை சில துளிகள் இட்டு நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் பெறலாம்.

◾கைகுட்டைகளில் இந்த தைலத்தை சில துளிகள் இட்டு மூக்கடைப்பு நேரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

◾வாய்வு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு தொப்புள் பகுதியில் தைலத்தை தேய்த்து பிறகு துண்டை சூடான தண்ணீரில் நனைத்து தொப்புள் பகுதியை மூடி வைக்க வேண்டும்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த தைலத்தின் மதிப்பும், பயன்பாடும் அதிகரித்து கொண்டே தான் செல்லும்.