விளையாட்டு செய்திகள்

‘இப்படியே கேட்டா எழுந்து போயிடுவேன்’ – செய்தியாளர்களிடம் கடுகடுத்த கேப்டன்!

Afghanistan captain Naib threatens to walk out of press conference
Afghanistan captain Naib threatens to walk out of press conference

ஆப்கானிஸ்தான் அணிக்கு இது உண்மையில் சோதனை காலம் போல…

உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிப் பெற்று, கம்பீரமாக, தன்னம்பிக்கையுடன் தொடரில் அடியெடுத்து வைத்த ஆப்கன்., 5 போட்டிகளில் ஆடி, ஐந்திலும் தோல்வியுற்று, தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக அறியப்படும் ரஷித் கான், 9 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்து, உலகக் கோப்பையில் அதிக ரன்கள் தாரை வார்த்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைக்க நொந்து போனது ஆப்கானிஸ்தான். அதிலும், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் 17 சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஆப்கன் பவுலர்களை கண் கலங்கவே வைத்துவிட்டார்.

இப்படிப்பட்ட அதல பாதாள நிலையில் இருக்கும் ஆப்கன் அணிக்கு மேலும் ஒரு சோதனை, அவர்களது கேப்டன் வடிவில் வந்திருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஆப்கன் கேப்டன் குல்பாதின் நைப் செய்தியாளர்களை அணுகிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இங்கிலாந்து போட்டிக்கு முந்தைய நாள் மான்செஸ்டர் ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பொது மக்கள் சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வீரர்களை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது தகராறு நடந்ததாக தெரிகிறது. போலீஸ் தரப்பில், ‘இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த கேள்வியை தான் செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பினர். அதற்கு பதிலளித்த நைப், “அந்தச் சம்பவம் குறித்தும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி தெரிய வேண்டுமானால் எங்களது அணியின் மேலாளர் அல்லது பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார். செய்தியாளர்கள் மேலும் அதுகுறித்தே கேள்வி கேட்க, “தொடர்ந்து இதுபற்றியே கேள்வி கேட்டால் நான் எழுந்து சென்றுவிடுவேன்” என நைப் ஆவேசமாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்… மைண்ட் வாய்ஸ்-னு நினைச்சி சத்தமா பேசிட்டு இருக்கீங்க!.

Related posts