‘எங்கள் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தான்’ – டு பிளசிஸ் பகிரங்க குற்றச்சாட்டு

SA vs PAK, World Cup 2019
SA vs PAK, World Cup 2019

என்ன ஜி… பொசுக்குன்னு எப்படி சொல்லிட்டீங்க? என்று இந்திய ரசிகர்களை புலம்ப வைத்திருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ்… குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை….!

அதற்கு காரணம் இந்த சம்பவம் தான்,

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று(ஜூன்.23) பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்தது.

ஹாரிஸ் சோகைல் 59 பந்தில் 89 ரன்களும், பாபர் ஆசம் 69 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க தராப்பில் ங்கிடி 3 விக்கெட்டும், இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா, 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களே எடுக்க, 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இது அந்த அணியின் 5-வது தோல்வியாகும். இதனால், உலகக் கோப்பை தொடரில் அந்த அணி பரிதாபமாக வெளியேறியது.

தோல்வி குறித்து தென்.ஆ., கேப்டன் டு பிளசிஸ் கூறுகையில், “நாங்கள் சரியான கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணியின் தொடக்கத்தை கட்டுப்படுத்த தவறவிட்டோம். அதேபோல், தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

இந்த உலகக் கோப்பையில் நாங்கள் சரியாக ஆடவில்லை. எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது. இம்ரான்தாகிர் சிறப்பாக பந்து வீசினார். அவர் விதிவிலக்கான பந்துவீச்சாளர். ஆனால், மற்ற பந்து வீச்சாளர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை.

எங்கள் அணியின் வேகப்பந்து வீரர் ரபடாவை ஐ.பி.எல். போட்டியில் விளையாடாமல் இருக்க முயற்சி செய்தோம். அவர் ஐ.பி.எல். போட்டியில் ஆடாமல் இருந்திருந்தால் புத்துணர்ச்சியுடன் இருந்திருப்பார். ஓய்வு இல்லாமல் இருந்தது பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. ஐ.பி.எல். போட்டியை விட உலக கோப்பை முக்கியமானது. தென்னாப்பிரிக்க வெளியேற்றத்துக்கு ஐ.பி.எல். போட்டி காரணமாக அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இங்கு ஒரு விஷயத்தை வசதியாக டு பிளசிஸ் மறந்துவிட்டார் போலும். அவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் ஆடியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும், சீசன் முழுவதும்.

தவிர, ஐபிஎல்-ல் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்வதேயில்லை. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த வெற்றி தான், இத்தொடரில் அவர்களது இரண்டாவது வெற்றியே. 6 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் அவர்கள் தோற்றுதானே போயிருக்கிறார்கள்!. உங்கள் கூற்றுப்படி பார்த்தால், பாகிஸ்தான் கலக்கி இருக்க வேண்டுமே டு பிளசி??? உண்மையில் தோல்விக்கு காரணம் என்னவென்று யோசியுங்கள்.