ரசிகர்களை அலற வைத்த இந்தியா – ஆப்கன் போட்டி! சாத்து சாத்தியும் நொந்து போன வெஸ்ட் இண்டீஸ்!

Ind vs Afg Match Updates
Ind vs Afg Match Updates

உலகக் கோப்பை 2019 தொடரில், நேற்று (ஜூன்.22) சவுத்தாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக, விராட் கோலி 67 ரன்களும், கேதர் ஜாதவ் 52 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்து தோற்றது. தொடக்கத்தில் இருந்து கடைசி ஓவர் வரை, இந்திய அணியை பாடாய்படுத்திய ஆப்கன் அணியில், அதிகபட்சமாக முகமது நபி 52 ரன்கள் எடுத்து, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான பிறகே, வெற்றி இந்தியா வசமானது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரில் 4 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி, முகமது ஷமி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம், ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் பாதிக்கப்பட்டது. அதேசமயம், தனது ஆறாவது போட்டியில் ஆடிய ஆப்கானிஸ்தான், ஆறு போட்டிகளிலும் தோற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

அதேபோன்று, நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், வெஸ்ட் இண்டீசும், நியூசிலாந்தும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 154 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். அதேபோல், ராஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 5 ரன்கள் வித்தியாசத்தில் கிட்ட வந்து தோற்றது. க்றிஸ் கெய்ல் 87 ரன்களும், ஹெட்மயர் 54 ரன்களும் எடுக்க, இறுதிக் கட்டத்தில் கார்லஸ் பிரத்வெய்ட் 82 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இவ்வளவு அடித்தும், மற்ற வீரர்கள் சொதப்பியதால், 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோற்றது.

இதன்மூலம், ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றியுடன் நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் ஆறு போட்டிகளில் விளையாடி, நான்காவது தோல்வியை பதிவு செய்தது.